பீகார் மாநிலம் கதிஹார் மாநகராட்சி மேயர் சிவராஜ் பஸ்வான். எளிமையான மேயர் என அப்பகுதி மக்களால் கொண்டாடப்படும் சிவராஜ் கார் இன்றி, இருசக்கர வாகனங்களிலேலே சென்று மக்களை சந்திப்பை வாடிக்கையாக வைத்துள்ளார்.
அந்தவகையில், இவர் நேற்றைய தினம் தனது பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அவரை வழிமறித்த 3 பேர் கொண்ட கும்பல், சிவராஜ் பஸ்வானை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியது.
இதில் மார்பில் துப்பாக்கிக் குண்டுக்கள் பாய்ந்த நிலையில் சம்பவ இடத்திலேயே சிவராஜ் பஸ்வான் சரிந்துவிழுந்துள்ளார். துப்பாக்கிச் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வருவதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சிவராஜ் பஸ்வானை மீட்டு அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் முதல்கட்டமாக மேயர் கொலை வழக்கில், நான்கு குற்றவாளிகளை போலிஸார் கைது செய்தனர்.
மேலும், பா.ஜ.க எம்.எல்.ஏ கவிதா பஸ்வானின் மருமகன் உட்பட 12 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். சிவராஜ் பஸ்வானை மேயராக ஆனதில் இருந்து பா.ஜ.க எம்.எல்.ஏவுக்கும் சிவராஜ் பஸ்வானுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.