தமிழ்நாடு

“இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்றுக் கொடுத்த ஆங்கிலேயர்” : நார்மன் பிரிட்சர் குறித்து சுவாரஸ்ய தகவல் !

இந்தியாவிற்கு முதல் ஒலிம்பிக் பதக்கத்தை பெற்றுக் கொடுத்தார் நார்மன் பிரிட்சர்.

“இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்றுக் கொடுத்த ஆங்கிலேயர்” : நார்மன் பிரிட்சர் குறித்து சுவாரஸ்ய தகவல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

ஒவ்வொரு ஒலிம்பிக்கின் போதுமே இந்தியா எத்தனை பதக்கங்களை வெல்லும் என்பதே அனைவரின் ஆவலாகவும் இருக்கும். ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா இதுவரை மீராபாய் சானுவுடன் சேர்த்து 29 பதக்கங்களை வென்றிருக்கிறது. இந்த 29 பதக்கத்திற்கும் தொடக்கப்புள்ளியாக அமைந்தது ஆங்கிலேயர்/இந்தியர் நார்மன் பிரிட்சர். இவர்தான் இந்தியாவிற்கு முதல் ஒலிம்பிக் பதக்கத்தை பெற்றுக் கொடுத்தார்.

ஆங்கிலேய தம்பதிக்கு கொல்கத்தாவில் 1877ல் பிறந்தவர் இவர். இந்தியாவிலேயே வளர்ந்து படிப்பை முடித்த இவர் விளையாட்டுகளிலும் ஆர்வமாக இருந்திருக்கிறார். பெங்காலில் நடக்கும் வருடாந்திர தடகள போட்டிகளில் தொடர்ந்து 7 ஆண்டுகள் வெற்றி பெற்று பிரபலமாகியிருக்கிறார். தடகளம் மட்டுமில்லாமல் கால்பந்திலும் மிகுந்த ஆர்வமுடைய வீரராக இருந்திருக்கிறார். சிறந்த கால்பந்து வீரராக விளங்கிய இவர், இந்திய கால்பந்து கூட்டமைப்பில் முக்கியப் பொறுப்பிலும் இருந்திருக்கிறார்.

பிரிட்டனுக்கு தொழில் நிமித்தமாக சென்றிருந்த போது அங்கிருந்து 1900 ஆம் ஆண்டு நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு சென்றார். இந்த ஒலிம்பிக்ஸில் தடகள போட்டியில் 5 பிரிவுகளில் பங்கேற்ற இவர் 200மீ ஓட்டம், 200மீ தடை ஓட்டம் இரண்டிலும் வெள்ளி வென்றார். ஆனால், இவர் இந்தியா, பிரிட்டன் இரண்டு நாடுகளின் சார்பிலுமே பங்கேற்றிருக்கவில்லை. தனிநபராக பங்கேற்றிருந்தார்.

“இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்றுக் கொடுத்த ஆங்கிலேயர்” : நார்மன் பிரிட்சர் குறித்து சுவாரஸ்ய தகவல் !

காலங்கள் ஓடிய பிறகு, இவரின் பதக்கத்தை இந்தியா கணக்கில் சேர்ப்பதா பிரிட்டன் கணக்கில் சேர்ப்பதா என பஞ்சாயத்து எழுந்தது. அவர் இந்திய பிறப்பு சான்றிதழ், இந்திய பாஸ்போர்ட் எல்லாம் வைத்திருந்ததால் இந்திய கணக்கில் சேர்க்க வேண்டும் எனவும், பிரிட்டனின் குழுவோடு ஒலிம்பிக்கிற்கு பயணப்பட்டிருந்தார் என்பதால் பிரிட்டனின் கணக்கில் சேர்க்க வேண்டும் என்றும் ஒரு கூட்டம் பஞ்சாயத்து செய்தது.

சரந்தினு சாயல், டேவிட் வாலச்சின்ஸ்கை போன்ற பிரபல விளையாட்டு எழுத்தாளர்கள் சில வரலாற்று ஆய்வுகளுக்குப் பிறகு இந்த பதக்கம் இந்தியாவுக்கு வழங்கப்பட வேண்டும் என கூறினர். 2000 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் வரலாற்றிஞர் இயான் புச்சனன் இந்த பதக்கம் பிரிட்டனுக்கே சேர வேண்டும் என கூறினார். இப்படி இந்த பிரச்சனைக்கு தொடர்ந்து இரண்டு தரப்பு கருத்துகளும் வலுசேர்த்துக் கொண்டே இருந்தன. நார்மன் வென்ற அந்த பதக்கத்தை இப்போது வரை சர்ச்சைகள் சூழ்ந்தே இருக்கிறது.

ஒலிம்பிக் பதக்கத்தை வென்றுவிட்டு இந்தியாவிற்கு வந்த நார்மன், சில ஆண்டுகள் இங்கே தங்கிவிட்டு பின் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார். அங்கே நார்மன் ட்ரெவர் என தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். பல படங்களில் நடித்த இவர் 1929 ல் மூளையில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக உயிரிழந்தார்.

இறுதியாக, இப்போது வரை இவரின் பதக்கங்களை இந்தியாவின் பெயரிலேயே பதிவு செய்து வைத்துள்ளது ஒலிம்பிக் அமைப்பு. ரெக்கார்ட்படி இந்தியாவிற்கு முதல் ஒலிம்பிக் பதக்கத்தை பெற்றுக்கொடுத்தவர் ஒரு வெள்ளைக்காரர்!

-உ.ஸ்ரீ

banner

Related Stories

Related Stories