தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வுப்பணிக்காக பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து, அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அந்தவகையில், அடர்ந்த வனப் பகுதிகளில் 15 கிலோமீட்டர் நடந்து சென்று மக்கள் குறைகளை கேட்ட சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனின் நடவடிக்கை பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு நேற்று முன் தினம் சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன், அரசு மருத்துவமனை ஆரம்ப சுகாதார நிலையங்கள், மற்றும் மலைப்பகுதிகளிலும் அடர்ந்த வனப் பகுதிகளிலும் உள்ள மலைவாழ் மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து அவர்கள் தெரிவித்த தேவைகளை உடனடியாக செய்து கொடுப்பதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து நேற்று இரவு கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஒன்றியத்துக்குட்பட்ட மலை கிராமமான பெட்டமுகிலாலம் கிராமத்தில் கலைநிகழ்ச்சி நடத்தி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், குழந்தை திருமணம் உள்ளிட்ட விழிப்புணர்வு நாடகங்களை நடத்தி பொதுமக்களுக்கு சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
அதுமட்டுமல்லாது, மறுநாள் அதிகாலை பெட்டமுகிலாலம் கிராமத்தில் இருந்து நடைபாதையாக 15 கிலோமீட்டர் தூரம் பாதையே இல்லாத அடர்ந்த வனப் பகுதிகளுக்குள் நடந்துசென்று அந்தப் பகுதியில் வாழும் மக்களிடம் குறைகளை கேட்டறிந்து அவருடைய தேவையை உடனடியாக செய்து கொடுப்பதாக உறுதி அளித்தார்.
அடர்ந்த வனப் பகுதிகளுக்குள் பாதையே இல்லாத பகுதிகளில் நடந்து சென்று மக்கள் குறைகளைக் கேட்டது அந்தப் பகுதி மக்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அமைச்சர் மா.சுப்பிரமணியனின் நடவடிக்கை பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் அரசியல் முத்த தலைவர் நாஞ்சில் சம்பத் பாரட்டி, ட்விட்டரில் வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக நாஞ்சில் சம்பத் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மா.சு.வின் கால்கள் மான்களின் கால்கள். அடர்ந்த வனப்பகுதியில் உயர்ந்த மலையின் உச்சியில் பதினைந்து கிலோமீட்டர் நடந்து மக்கள் குறைகேட்ட அமைச்சர் மா.சு.வின் சலிக்காத கால்களுக்கு என் முத்தங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.