தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனை ஆரம்ப சுகாதார நிலையங்கள், மற்றும் மலைப்பகுதிகளிலும் அடர்ந்த வனப் பகுதிகளிலும் உள்ள மலைவாழ் மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து அவர்கள் தெரிவித்த தேவைகளை உடனடியாக செய்து கொடுப்பதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து நேற்று இரவு கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஒன்றியத்துக்குட்பட்ட மலை கிராமமான பெட்டமுகிலாலம் கிராமத்தில் கலைநிகழ்ச்சி நடத்தி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், குழந்தை திருமணம் உள்ளிட்ட விழிப்புணர்வு நாடகங்களை நடத்தி பொதுமக்களுக்கு சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
தொடர்ந்து அந்த மலை கிராமத்தில் எந்தவித வசதியும் இல்லாத ஒரு தொடக்கப்பள்ளியில் இரவு முழுவதும் தங்கி மலைவாழ் மக்களுடைய வாழ்க்கை நிலை குறித்து கேட்டறிந்தார். இன்று அதிகாலை பெட்டமுகிலாலம் கிராமத்தில் இருந்து நடைபாதையாக 15 கிலோமீட்டர் தூரம் பாதையே இல்லாத அடர்ந்த வனப் பகுதிகளுக்குள் நடந்துசென்று அந்தப் பகுதியில் வாழும் மக்களிடம் குறைகளை கேட்டறிந்து அவருடைய தேவையை உடனடியாக செய்து கொடுப்பதாக உறுதி அளித்தார். அடர்ந்த வனப் பகுதிகளுக்குள் பாதையே இல்லாத பகுதிகளில் நடந்து சென்று மக்கள் குறைகளைக் கேட்டது அந்தப் பகுதி மக்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.