சிவகங்கை அ.தி.மு.க ஒன்றிய சேர்மன் மஞ்சுளா பாலச்சந்தர் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்துள்ளார்.
சிவகங்கை ஒன்றியத்தில் 18 வார்டுகள் உள்ளன. இதில் அ.தி.மு.கவில் 8 பேர், பா.ஜ.க, தே.மு.தி.கவில் தலா ஒருவர் என 10 கவுன்சிலர்கள் அ.தி.மு.க வசம் இருந்தனர். தி.மு.கவில் 6 பேர், காங்கிரஸில் ஒருவர் என 7 கவுன்சிலர்கள் தி.மு.க கூட்டணியில் இருந்தனர். ஒருவர் அ.ம.மு.க கவுன்சிலராக இருந்தார்.
அ.தி.மு.கவைச் சேர்ந்த மஞ்சுளா பாலச்சந்தர் தலைவராகவும், கேசவன் துணைத் தலைவராகவும் இருந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அ.ம.மு.க கவுன்சிலர் பத்மாவதி தி.மு.கவில் இணைந்தார்.
இந்நிலையில், சிவகங்கை ஒன்றியக் குழு தலைவர் மஞ்சுளா பாலச்சந்தர் தனது ஆதரவு கவுன்சிலர்களான அ.தி.மு.கவைச் சேர்ந்த வேல்முருகன், லட்சுமி சரவணன், தே.மு.தி.கவைச் சேர்ந்த ரமேஷ் ஆகியோருடன் இன்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார்.
இதனால் சிவகங்கை ஒன்றியக்குழுவில் தி.மு.கவின் பலம் 12-ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் சிவகங்கை ஒன்றியக்குழு தி.மு.க வசம் வந்துள்ளது.