தமிழ்நாட்டில் சில மாதங்களுக்கு முன்பு போலிஸ் அதிகாரிகள் பெயரில் மர்ம நபர்கள் போலியாக ஃபேஸ்புக்கில் தொடங்கி பலரிடம் பண மோசடி செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலிஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஷகீல்கான், ரவீந்தர்குமார் ஆகிய இரண்டு பேரைக் கைது செய்தனர்.
இந்நிலையில், பேஸ்புக்கில் எப்படி பண மோசடி செய்யப்பட்டதோ அதேபோன்று தற்போது வாட்ஸ்அப்பில் மர்ம நபர்கள் மோசடி செய்து வருவதை போலிஸார் கண்டுபிடித்துள்ளனர். மேலும் டி.ஜி.பி அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவரின் புகைப்படத்தை வாட்ஸ்அப் டி.பி.யாக வைத்து பண மோடி செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது.
அந்த வாட்ஸ்அப்பில் நண்பருக்கு அவசரமாகப் பணம் தேவைப்படுகிறது. எனது போன்பே வேலை செய்யவில்லை. எனவே இந்த செல்போன் எண்ணுக்கு ரூபாய் 10 ஆயிரம் கூகுள் பே அனுப்புங்கள். நான் நாளை அனுப்பிவிடுகிறேன் என அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இந்த வாட்ஸ்அப் மெசேஜ் சென்றுள்ளது.
இதில் சந்தேகமடைந்த அவரது நண்பர்கள் சிலர் அவருக்குத் தொடர்புகொண்டு இதுகுறித்து கேட்டுள்ளனர். அப்போது தான் இந்த மோசடி குறித்து அவருக்குத் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சைபர் கிரைம் போலிஸார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். மேலும் வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் போன்றவற்றில் வரும் தகவல்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என போலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.