தமிழ்நாடு

“அரசுப் பள்ளி நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை” : அமைச்சர் அன்பில் மகேஸ் எச்சரிக்கை!

“விரைவில் டி.ஆர்.பி தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும்” என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

“அரசுப் பள்ளி நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை” : அமைச்சர் அன்பில் மகேஸ் எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அரசுப் பள்ளி நிலங்களை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களைத் தக்க வைத்துக்கொள்ள பள்ளியின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். அதனால்தான் மாவட்டங்கள்தோறும் ஆய்வுக்குச் செல்லும்போது, அதுகுறித்துப் பரிசீலித்து வருகிறேன். முதன்மைக் கல்வி அலுவலர்களிடமும் இதுகுறித்துக் கருத்துகளைக் கேட்டிருக்கிறோம். பள்ளிகளில் ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் திட்டமிட்டு வருகிறோம்.

அரசுப் பள்ளி நிலங்களை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். அந்த நிலங்கள் உரிய முறையில் மீட்கப்படும். பள்ளிக் கல்வித்துறையைப் பொறுத்தவரை துறை அதிகாரிகள், அரசுப் பள்ளிகள், மாணவர்கள், பெற்றோர்கள், தனியார் பள்ளிகள் என எல்லோருமே முக்கியம். ஒரு தரப்புக்காக மற்றொரு தரப்பை விட்டுக்கொடுக்க முடியாது.

பள்ளிகளில் 75 சதவீதத்துக்கும் மேலாகக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. தனியார் பள்ளிகளில் முறைகேடாகக் கட்டணம் வசூல் செய்பவர்கள் மீது முதல்கட்டமாக எச்சரிக்கை செய்து வருகிறோம். தொடர்ந்து கட்டண வசூலில் ஈடுபடும் பள்ளிகள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுப்போம்.

பள்ளி ஆசிரியர்கள் நியமனத்துக்கான தேர்வில் ஒரே முறையைப் பின்பற்ற வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். விரைவில் இதுகுறித்து முடிவு எடுத்து அறிவிக்கப்படும். மாணவர்களுக்கு Tab வழங்குவது குறித்து இன்னும் ஆலோசனை தொடங்கவில்லை.

ஆசிரியர் தேர்வு வாரியத்தை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துடன் இணைப்பது குறித்து எந்த ஆலோசனையும் மேற்கொள்ளப்படவில்லை. விரைவில் டி.ஆர்.பி தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும்.

தமிழ்நாட்டில் 9, 10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளி திறப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஊரடங்கு பிறப்பிக்கப்படும் முன்பாக மருத்துவ வல்லுனர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்துவது வழக்கம். பள்ளிகளை திறக்கவேண்டும் என்று முடிவு செய்தால் விரிவாக முதலமைச்சர் ஆலோசனை நடத்துவார்.

முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி முடிவெடுக்கப்படும். அப்போது முன்பைப் போலவே முறையான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும்'” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories