தென்காசி மாவட்டம், கேசிரோடு வாட்டர் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்தவர்கள் சீதாராஜ் பிரேமா தம்பதி. இந்த தம்பதிக்கு தனம், இசக்கியம்மாள் என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. சீதாராஜ் கூலி வேலை செய்து குடும்பத்தை கவனித்து வருகிறார்.
இந்நிலையில், சிறுமி இசக்கியம்மாளுக்குக் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பக்கத்து வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டில் வைக்கப்பட்டிருந்த பிளீச்சிங் பவுடரை தின்பண்டம் என நினைத்து அதைச் சாப்பிட்டுள்ளார்.
பின்னர் சிறுமி எரிச்சல் தாங்காமல் துடித்துள்ளார். இதையடுத்து சிறுமியைத் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், சிறுமி இசக்கியம்மாளுக்கு பிளீச்சிங் பவுடர் சாப்பிட்டதால் அவரால் உணவு மற்றும் தண்ணீர் கூட குடிக்க முடியாததால் உடல் மெலிந்து வந்தது. செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிறுமிக்குச் சிகிச்சை அளித்தும் போதிய பலன் கிடைக்கவில்லை.
பின்னர் இது பற்றி அறிந்த மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அரசும் உடனே சிறுமியைச் சென்னை எழும்பூர் மருத்துவமனைக்கு அழைத்து வந்து அங்கு இசக்கியம்மாளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் எழும்பூர் மருத்துவமனைக்குச் சென்று சிறுமி இசக்கியம்மாளை நேரில் சந்தித்தார். மேலும் மருத்துவர்களிடம் சிறுமிக்கான சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்,”குழந்தையின் எடை 8 கிலோவாக உயர்ந்துள்ளது. குழந்தை இன்னமும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே குழந்தையின் பெற்றோர்கள் சென்னையில் தங்க வேண்டியுள்ளது. ஏழை எளிய குடும்பமாக அவர்கள் சென்னையில் வெளியில் தங்க வசதி இல்லாததால் சேப்பாக்கத்தில் உள்ள அரசு சட்டமன்ற விடுதியில் எனக்கு ஒதுக்கப்பட்ட விடுதியில் அவர்களைத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான உணவு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.
தென்காசியிலிருந்து சென்னைக்குக் குழந்தையின் சிகிச்சைக்காக வந்த சட்டமன்ற விடுதியில் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறையில் அமைச்சர் மா.சுப்ரமணியன் தங்க வைத்துள்ளதற்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.