சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நியூமோகோக்கல் நிமோனியா மற்றும் மூளைக் காய்ச்சல் நோய்களிலிருந்து குழந்தைகளை காப்பதற்கான நியூமோகோக்கல் கான்ஜூகேட் தடுப்பூசி செலுத்துவதை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்தியாவில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நிமோனியா, மூளைக்காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்களினால் 12 லட்சம் குழந்தைகள் பாதிப்புக்குள்ளாகி பலியாகின்றனர்.
தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அதற்கான தடுப்பூசியாக நியூமோகோக்கல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தடுப்பூசிகள் போடும் பணியினை திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கி வைத்தோம் என்றும் தினந்தோறும் எழும்பூர் குழந்தைகள் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடப்படும்.
தனியார் மருத்துவமனைகளை பொறுத்தவரை மூன்று தவணைகளாக போடப்படும் தடுப்பூசி செலுத்துவதற்கு 12 ஆயிரம் வரை செலவாகும். அரசின் சார்பில் தடுப்பூசிகள் இலவசமாக போடும் திட்டத்தை தொடங்கி வைத்து உள்ளோம். எல்லா மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 5 வயது பெண் குழந்தை பீளிச்சிங் பவுடர் சாப்பிட்டதால் உடல் நலிவுற்று எழும்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தையின் குடல் சுருங்கி உணவு உட்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது என்றும் மருத்துவர்களின் தீவிர சிகிச்சை காரணமாக குழ்ந்தையின் வயிற்றில் துளையிட்டு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
6 கிலோவில் இருந்த குழந்தையின் எடை 8 கிலோ அளவிற்கு உயர்ந்துள்ளது. மருத்துவர்களின் தீவிர சிகிச்சை காரணமாக குழந்தை விரைவில் குணமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குழந்தையின் பெற்றோர்கள் தங்குவதற்காக எனக்காக ஒதுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் உள்ள அறையில் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
5 வயதிற்குட்பட்ட 9 லட்சத்து 23 ஆயிரம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படவுள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்பு போட்டு இருக்க வேண்டும். ஆனால் என்ன காரணத்தினால் எடப்பாடி அரசு செய்யவில்லை என்பது தெரியவில்லை. 70 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது. முதல் தவணை உள்ள குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசிகள் போடப்படும்.
தசை சிதைவு நோய் உள்ளவர்களுக்கு என்று சிகிச்சை அளிக்க சென்னையில் மருத்துவமனை உள்ளது. தமிழகம் முழுவதும் இந்த நோயினால் 2 ஆயிரம் குழந்தைகளும், சென்னையில் 200 குழந்தைகள் உள்ளனர். சென்னையில் உள்ள மருத்துவமனை ஆய்வு செய்யப்படும் தேவைப்பட்டால் அந்த மருத்துவமனை விரிவாக்கம் செய்யப்படும். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை விரைவில் முதலமைச்சர் தொடங்கி வைக்கவுள்ளார். அதற்கான அடிப்படை கட்டமைப்பினை துறை மேற்கொண்டு வருகிறது.