தமிழ்நாடு

“அ.தி.மு.க ஆட்சியில் முறைகேடுகளால் அரசு கேபிள் டி.விக்கு ரூ.400 கோடி கடன்”: அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி!

தமிழ்நாட்டில் அனைத்து கிராமங்களுக்கும் இணைய வசதி கிடைக்கும் வகையில் ஃபைபர் நெட் அமைக்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

“அ.தி.மு.க ஆட்சியில் முறைகேடுகளால் அரசு கேபிள் டி.விக்கு ரூ.400 கோடி கடன்”: அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அரசு கேபிள் நிறுவனம் நடத்தியதில் 400 கோடி ரூபாய் வரை கடன் ஏற்பட்டிருப்பதாகவும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 76 லட்சத்திலிருந்து 22 லட்சமாக குறைந்திருப்பதாகவும் அமைச்சர் மனோ தங்கராஜ் சேலத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் இ-சேவை மையத்தினை தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

இ-சேவை மையங்களில் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் குறித்து கேட்டறிந்த அவர் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது எவ்வளவு நேரத்தில் தீர்வு காணப்படுகிறது என்பது குறித்தும் ஆய்வு செய்த பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இதனையடுத்து  இலவச ஆதார் சேவை மையம் மற்றும் அரசு கேபிள் டிவி நிறுவனம் ஆகிய இடங்களையும் அமைச்சர் பார்வையிட்டார்.

சேலத்தில் இரண்டாம் கட்டமாக தகவல் தொழில்நுட்பப் பூங்கா தொடங்குவதற்கான இடம் குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மனோ தங்கராஜ், சேலம் அம்மாபேட்டை பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக மூடப்பட்டு இருக்கும் கூட்டுறவு நூற்பாலை இருக்கும் இடத்தை பார்வையிட்டார். அந்த வளாகத்தில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதனையடுத்து சேலம் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் செய்யப்பட்டுவரும் இ-சேவை மைய பணிகளைப் பார்வையிட்ட அமைச்சர் மனோ தங்கராஜ், சேலம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் இயங்கி வரும் சேலம் தகவல் தொழில்நுட்ப பூங்கா கூட்ட அரங்கில் தனியார் மென்பொருள் நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சேலத்தில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா வளாகத்தில் மேலும் புதிய மென்பொருள் நிறுவனங்களை அமைப்பது தொடர்பாகவும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது தொடர்பாக அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். 

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், “தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையை நாட்டிலேயே முதன்மையான துறையாக மாற்றிட தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

தகவல் தொழில்நுட்பப் பூங்காவை மேம்படுத்திடவும் அதன் மூலமாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். இதற்காகவே தமிழ்நாடு முழுவதும் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். கொரோனா காலத்தில் தகவல் தொழில்நுட்பத்தை மக்கள் பெருமளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

வருங்காலத்தில் தொழில்நுட்பத்தை தவிர்க்க முடியாத நிலை உள்ளது, இதன் காரணமாகவே இந்தத் துறைக்கு முதலமைச்சர் முக்கியத்துவம் கொடுத்துள்ளார். இதன் வெளிப்பாடே, இ-பட்ஜெட் முதல் முறையாக தாக்கல் செய்யப்பட உள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் முதலீட்டாளர்கள் வேறு மாநிலத்திற்கு செல்லாமல் தமிழகத்தில் செயலாற்றிட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார். அவர்களுக்கு தேவையான அனைத்து அனுமதிகளும் தங்கு தடையின்றி கிடைத்திட நடவடிக்கை எடுத்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ஒன்றரை ஆண்டுகளில் ரூ.400 கோடி நிதி கிடைத்தது. ஒளிவுமறைவற்ற வெளிப்படைத்தன்மை காரணமாக, தி.மு.க அரசு பொறுப்பேற்ற கடந்த 2 மாதங்களிலேயே ரூ.412 கோடி கிடைத்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த ஒன்றரை லட்சம் பட்டதாரிகள் தங்கள் படிப்பினை முடித்து வெளியே வருவதாக தெரிவித்த அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது மிகப்பெரிய சவாலாக இருப்பதாகவும் அவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் அளவிற்கு கட்டமைப்பை உருவாக்க முதலமைச்சர் உத்தரவிட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். இதற்கேற்ற வகையில் எந்த ஒரு முதலீட்டாளரும் எளிதாக அணுகும் வகையில் அரசின் நடவடிக்கைகள் மாற்றப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இ-சேவை மையத்தின் செயல்பாடுகளை கூடுதலாக மேம்படுத்த ஆய்வு செய்து வருவதாக குறிப்பிட்ட அமைச்சர் மனோ தங்கராஜ் தேவைப்படும் இடங்களில் ஆதார் உதவி மையங்களின் எண்ணிக்கையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முன்பு 7 லட்சம் பேர் வரை மட்டுமே தொடர்பு கொள்ளும் வகையில் இருந்த நிலையில் ஒரே நேரத்தில் 60 லட்சம் பேர் வரை தொடர்புகொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசின் சேவை மையம் தரம் உயர்த்தப்பட்டு இருப்பதாகவும் தமிழகத்திலுள்ள 12,534 கிராம ஊராட்சிகளுக்கு முறையாக பைபர் நெட் மூலம் இணையதள வசதியை மேம்படுத்தும் பாரத்நெட் திட்டம் 1,800 கோடி ரூபாய் மதிப்பில் விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

அ.தி.மு.க ஆட்சியில் அரசு கேபிள் நிறுவனம் நடத்தியதில் 400 கோடி ரூபாய் அளவிற்கு கடன் ஏற்பட்டு விட்டதாகவும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் 76 லட்சத்திலிருந்து 22 லட்சமாக குறைந்துவிட்டதாக கூறிய அமைச்சர் மனோ தங்கராஜ் கடனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அரசு கேபிளில் தரமான முறையில் குறைந்த கட்டணத்தில் சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

சேலம் கோவை ஓசூர் உள்ளிட்ட ஏழு இடங்களில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் தொடங்க முதலமைச்சர் உத்தரவிட்டிருப்பதாக கூறிய அமைச்சர் மனோ தங்கராஜ் சேலத்தில் இரண்டாம் கட்டமாக தகவல் தொழில்நுட்பப் பூங்கா அம்மாபேட்டை பகுதியில் செயல்படாமல் உள்ள கூட்டுறவு நூற்பாலை வளாகத்தில் தொடங்கின ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் கூறினார்.

banner

Related Stories

Related Stories