சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் 12 வது அரிமா சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்ட மன்ற உறுப்பினர்கள் எம்.கே.மோகன், பிரபாகர் ராஜா, அரிமா சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது,
”பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளில் அரிமா சங்கம் போன்ற தன்னார்வலர்கள் அரசுக்கும் மக்களுக்கும் உறுதுணையாக இருந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனாவால் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படும் நிலை இல்லை.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் குழந்தைகள் விடுதியில் தங்கி இருந்த 33 குழந்தைகளுக்கு டெல்டா வைரஸ் கண்டறியப்பட்டு அவர்கள் நலமுடன் உள்ளனர்.
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கு கொரோனா சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவ கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது” என்றார்.
இதைத் தொடர்ந்து ஊரடங்கு தளர்வுகளால் மக்கள் கூட்டம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,
”மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டே ஊரடங்கில் தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை மக்கள் அலட்சியமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
தமிழக முழுவதும் மாவட்டம் வாரியாக கொரோனா பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா பரவல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. மூன்றாம் அலைக்கு பொதுமக்கள் வழிவகுக்காமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். குடியரசு தலைவருடனான சந்திப்பில் முதலமைச்சர் மேகதாது விவகாரம் குறித்து பேசவுள்ளார் என்று தெரிகிறது.”
இவ்வாறு அமைச்சர் கூறினார்.