காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் சுற்று வட்டாரங்களில் 5 சிப்காட் உள்ளன. இங்கு அதிகமான தொழிற்சாலைகள் இருப்பதால் தொழிற்சாலை கட்டுமான பணி, கட்டுமான பொருட்கள், ஒப்பந்த பணியாளர்கள், சரக்கு வாகனங்கள், வேலைக்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள், கேண்டீன், கழிவுப் பொருட்கள் ஆகிய பணிகளை மேற்கொள்வதற்கு கடந்த அ.தி.மு.க ஆட்சியில் பிரபல ரவுடிகள் அ.தி.மு.கவினரின் துணையுடன் போட்டி போட்டுக்கொண்டு ஆர்வம் காட்டி வந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் பல்வேறு கொலை மற்றும் அடிதடி வழக்குகளில் சம்பந்தப்பட்ட பிரபல ரவுடி படப்பை குணா இது போன்ற பணிகளை தொழிற்சாலைகளின் நிறுவன மனித வள மேலாளரைகளை மிரட்டி தன் வசப்படுத்திக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், இவருக்கு உதவி புரிந்த போந்துரைச் சேர்ந்த சிவா (எ) பரமசிவம் வ/43, வல்லத்தை சேர்ந்த சதீஷ் வ/28 ஆகியோரை திருப்பெரும்புதூர் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது மலர்ந்துள்ள தி.மு.க தலைமையிலான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் ரவுடிகளின் நடவடிக்கைகளை ஒடுக்கும் நோக்கில் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் பிரபல ரவுடிகள் மற்றும் குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் மீது காஞ்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு கைது நடவடிக்கைகள் தொடர்கின்றன.
திருப்பெரும்புதூரில் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று திருப்பெரும்புதூர் டி.எஸ்.பி மணிகண்டன் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.