இந்திய நாட்டிற்கு என்று தனியாக தேசியமொழி எதுவும் கிடையாது என ஒன்றிய அலுவல் மொழிகள் துறை, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் பதில் அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், ஒன்றிய அரசிடம் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால், அதற்கு இந்தியிலேயே பதில்கள் அனுப்பிவைக்கப்படுகின்றன.
மேலும், இந்தியே இந்தியாவின் தேசிய மொழி என பா.ஜ.க-வை சேர்ந்த அமைச்சர்களே பேசியுள்ளனர். இதுபோல வட மாநிலங்கள் பலவற்றிலும் இந்தி தேசிய மொழி என தவறான தகவலை பா.ஜ.கவினர் பரப்பி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் சமூக ஆர்வலர் பாண்டியராஜாவிற்கு, யானைகள் மீது ரயில்கள் மோதல் தொடர்பாக ஆங்கிலத்தில் கேட்ட கேள்விகளுக்கு, சில வட மாநிலங்களின் ரயில்வே கோட்ட அதிகாரிகள் இந்தியில் பதில் அளித்திருந்தனர். இதுபோன்று மேலும், சிலரது கேள்விகளுக்கு இதே முறையில் பதில் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் சமூக ஆர்வலர் பாண்டியராஜா இந்திய மொழிகள் சம்பந்தமாக ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார்.
உள்துறை அமைச்சகம் இக்கேள்விகளை ஒன்றிய அலுவல் மொழிகள் துறைக்கு அனுப்பியிருந்தது. அந்தத் துறையினர் தந்த பதிலில், ‘‘இந்தியாவிற்கு என தேசிய மொழி எதுவும் கிடையாது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பினால், எந்த மொழியில் பதிலளிக்க வேண்டும் என்பது சம்பந்தமாக ஒன்றிய அலுவல் மொழிகள் துறை சார்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப் படவில்லை.
தகவல் தரும் அதிகாரி ஆங்கிலத்தில் கேட்ட கேள்விக்கு, இந்தியில் பதிலளித்தால் அவருக்கு எந்தத் தண்டனையும்கிடையாது. அலுவல்மொழி விதிகள் 1976 தமிழ்நாட்டிற்குப் பொருந்தாது’’எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தி.மு.க எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், “பல வருடங்களாக இதைத்தான் ஒன்றிய அரசுக்கு நாங்கள் சொல்லி வருகிறோம். பிற மொழி நிதியைப் பயன்படுத்தி ஒரே ஒரு மொழியை விளம்பரப்படுத்துவதை தயவுசெய்து செய்யாதீர்கள்.” எனக் கூறியுள்ளார்.