ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்சி அமைந்ததிலிருந்தே இந்தி பேசாத மக்கள் மீது இந்தியைத் திணிப்பதற்குத் தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வருவதும், அதற்கு எதிர்ப்புக்குரல் ஒலிப்பதும் தொடர்கதையாகி வருகின்றன. இருந்தபோதும் இந்தியைத் திணிக்கும் தனது போக்கை மட்டும் ஒன்றிய மோடி அரசு நிறுத்தியபாடில்லை.
அண்மைக் காலமாகவே இந்தி பேசாதம மாநிலங்களின் மக்களவை உறுப்பினர்களுக்குக் கூட அரசுசார் கடிதங்களை ஒன்றிய அரசு இந்தியிலேயே அனுப்பி வருகிறது. தற்போது முகவரிகளை கூட இந்தியில் குறிப்பிட்டு அனுப்பவும் தொடங்கியுள்ளது. மேலும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்புவோருக்கு ஒன்றிய அரசு இந்தியில் பதில் அளித்த கூத்தும் நடந்தது.
இதனைத் தொடர்ந்து தற்போது ஐ.ஐ.டியிலும் இந்தியை திணிக்கும் தனது சித்து வேலையை ஒன்றிய பா.ஜ.க அரசு துவக்கியுள்ளது. ஜம்மு ஐ.ஐ.டியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், பணியாளர்கள் ஆகியோருக்கு கொடுக்கப்படும் அனைத்து தகவல்களும் இந்தியிலேயே கொடுக்கப்படுவது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன், ஜம்மு ஐஐடி-யில் இந்தித் திணிப்பு என்பது வீடு எரியும்போது சிகரெட்டுக்கு நெருப்பு எடுக்கிற செயல் எனக் கூறி ஒன்றிய கல்வி அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக ஒன்றிய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு சு.வெங்கடேசன் எம்.பி எழுதியிருக்கும் கடிதத்தில், “ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை மூன்றாக உடைத்து ஒன்றிய பிரதேசங்களாக மாற்றிய காயம்கூட இன்னும் ஆறவில்லை, அதற்குள் ஜம்மு ஐ.ஐ.டியில் ஆசிரியர்கள், மாணவர்கள், பணியாளர்கள் என அனைவருக்கும் வழங்கப்படும் எல்லா தகவல்களிலும் இந்தி திணிக்கப்படுகிறது. அந்த பிராந்தியத்தில் சர்ச்சைகளை எழுப்புவதற்கான நேரம் இதுவல்ல, பன்முகத்தன்மைதான் மக்களை ஒற்றுமையாக வைத்திருக்கத் தேவையானதாகும். கல்வி வளாகங்கள் அந்த செயல்பாட்டில் முக்கியப் பங்கை வகிக்கவேண்டும்.
இந்தியில் தகவல்கள் வழங்கப்படுவதை, இந்தி தெரியாதவர்களால் புரிந்துகொள்ள முடியாது. ஆங்கிலத்தை விடவும் பெரிய எழுத்துருவில் இந்தி பயன்படுத்தப்படுவது, இந்தி தெரியாதவர்களைத் தூண்டக்கூடும். எனவே ஐ.ஐ.டி ஜம்முவில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் இதுபோன்ற விஷயங்களைச் செய்ய வேண்டாம் என தலையிடவேண்டும் என உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.