தமிழ்நாட்டில் நடந்த முடிந்த தேர்தலில், செலவுக்காகக் கட்சித் தலைமை அனுப்பிய பணத்தை, செலுவு செய்யாமல் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பா.ஜ.கவின் தமிழ்நாட்டுப் பொறுப்பாளர் சி.டி.ரவி தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.
மேலும் சிவகங்கை தொகுதியில் போட்டி போட்ட எச்.ராஜா, தேர்தல் செலவுக்காகக் கட்சி அனுப்பிய பணத்தில் வீடுகட்டி வருவதாக பா.ஜ.கவை தேர்ந்தவர்களே தலைமையிடத்தில் புகார் தெரிவித்து, கட்சியில் இருந்து விலகியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், எம்எல்ஏ சீட் வாங்கி தருவதாக பா.ஜ.க பிரமுகரிடம், ஒன்றிய அமைச்சரின் நெருங்கிய உதவியாளர் ஒருவர் பண மோசடி செய்ததாகக் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகர பா.ஜ.க தலைவர் புவனேஷ் குமார். இவர் கடந்த 30ம் தேதி பாண்டி பஜார் காவல்நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். இதில், சட்டமன்ற தேர்தலின் போது ஆரணி தொகுதியில் சீட் கேட்டு சென்னை பெரம்பூரைச் சேர்ந்த விஜயராமன் என்பவரை அணுகினேன்.
அப்போது, அவர் ஒன்றிய அமைச்சர் ஒருவரின் நெருங்கிய உதவியாளர் என நரோத்தமன் என்பவரை அறிமுகம் செய்துவைத்தார். பிறகு இருவரும் சேர்ந்து எம்.எல்.ஏ சீட்டு வேண்டும் என்றால் ஒரு கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என கேட்டனர்.
இதை நம்பி முதல் தவணையாக ரூபாய் 50 லட்சம் கொடுத்னேன். ஆனால் அவர்கள் எம்.எல்ஏ. வீட்டு வாங்கி கொடுக்கவில்லை. பின்னர் பணத்தைத் திருப்பி கேட்டபோது அவர்கள் பணம் கொடுக்க முடியாது என கூறிவருகின்றனர்.
மேலும் பா.ஜ.கவின் தமிழக தேர்தல் பொறுப்பாளராக இருந்த ஒன்றிய இணை அமைச்சர் கிஷன் ரெட்டியிடம் சென்று முறையிட்டபோது, ஒன்றிய அமைச்சர் செல்போன் மூலம் தொடர்புகொண்டு நரோத்தமன் மற்றும் அவரது தந்தை சிட்டி பாபுவிடம் பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
ஆனால் மறுபடியும் பணத்தைக் கொடுக்க முடியாது எனக் கூறி அவர்கள் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். எனவே இருவர் மீது போலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த புகாரை அடிப்படையாக கொண்டு நரோத்தமன், அவரது தந்தை சிட்டிபாபு, விஜயராமன், மகன் சிவபாலாஜி ஆகிய நான்கு பேர் மீது பாண்டி பஜார் போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.