சென்னையில் முடி திருத்துபவர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாமை அமைச்சர் மா. சுப்பிரமணியம் துவக்கி வைத்தார். அப்போது சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா உடனிருந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்
”தமிழகத்திற்கு 1.77 கோடி தடுப்பூசிகள் கிடைத்துள்ளது. இதில் இன்று காலை நிலவரப்படி 7,77,910 தடுப்பூசுகள் கையிருப்பு உள்ளது. இதே போன்று, டெல்லி பயணத்தின் போது, தமிழகத்தில் தடுப்பூசி செலுத்துவதற்கான விழிப்புணர்வு மிக சிறப்பாக நடைபெற்றது வருகிறது என பிரதமர் பாராட்டியதாகவும், தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசி தாராளமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தான் வைத்துள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிப்பு மையம் துவங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை பரிசீலிப்போம் என ஒன்றிய அமைச்சர் தெரிவித்ததாக கூறினார். தமிழகத்தில் புதிதாக அமைய உள்ள 11 மருத்துவ கல்லூரிகளில் 1,600 இடங்களுக்கான சேர்க்கையை தொடங்க வேண்டும். கரும்பூஞ்சை நோய் தமிழகத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்காக தமிழகம் முழுவதும் 7ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. சென்னையில் மட்டும் 500 படுக்கைகள் உள்ளதாகவும் கூறிய அவர், கருப்பு பூஞ்சை நோய்க்கு மருந்து வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கரும்பூஞ்சை பாதிப்பு துவக்க நிலையில் கண்டறிந்தால் விரைவில் குணப்படுத்த முடியும். இல்லையெனில், கண்பார்வை பரிபோதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
மேலும், எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைந்து துவங்க வேண்டும் என 13 கோரிக்கைகள் ஒன்றிய அமைச்சர்களிடத்தில் வைக்கப்பட்டது. கோரிக்கை மனுக்கள் அனைத்தையும் பரிசீலித்து விரைவில் பதில் கூறுவதாக தெரிவித்தனர். 3ம் அலையை பொறுத்தவரை இங்கிலாந்து போன்ற நாடுகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 3ம் அலையில் இறப்பு பொறுத்தவரை அங்கு குறைவாகவே உள்ளது. அங்கு அவர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டதால்தான் இறப்பு குறைந்துள்ளது.
எனவே நாம் தடுப்பூசியை முழுமையாக போட்டுக்கொள்ள வேண்டும். 3ம் அலையை எதிர்கொள்ள தமிழகத்தில் அனைத்து கட்டமைப்புகளும் தயார் நிலையில் உள்ளது. ஜிகா வைரஸ் பொறுத்தவரை ஒருவருக்கு கூட தமிழகத்தில் பாதிப்பு இல்லை. கேரளாவில் 22 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.” எனக் கூறினார்.