தமிழ்நாடு அரசு அமைத்த ஏ.கே.ராஜன் குழு ‘நீட்' தேர்வு தாக்கம் பற்றிய அறிக்கையைத் தருவதற்கு எந்தத் தடையும் இல்லை என உயர்நீதிமன்றம் கூறியிருப்பது தமிழ்நாடு அரசின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என தினகரன் நாளேடு தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
தினகரன் நாளேட்டின் இன்றைய (ஜூலை 15, 2021) தலையங்கம் வருமாறு:
மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒருங்கிணைந்த நுழைவு தேர்வாக ‘நீட்’ உள்ளது. இந்திய மருத்துவ குழுமம் சட்டம் - 1956 மற்றும் பல் மருத்துவர் சட்டம் 1948-ல், கடந்த 2018-ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டு, இந்த நுழைவுத்தேர்வு கொண்டு வரப்பட்டது. அகில இந்திய மருத்துவ குழும இடைநிலை கல்வி வாரியத்தால் இத்தேர்வு நடத்தப்பட்டது. 2019-ம் ஆண்டு முதல் இந்த நுழைவுத் தேர்வை, தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராகவே அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நிலைப்பாடு கொண்டுள்ளன. இத்தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு வேண்டும் என ஒன்றிய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், பலன் இல்லை.
இந்நிலையில், நீட் தேர்வால், தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட குழு, கடந்த ஜூன் 10-ம் தேதி தமிழக அரசால் அமைக்கப்பட்டது. நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராய்ந்து, ஒரு மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும்படி இந்த குழுவுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அதன்படி இந்த குழு நேற்று 165 பக்க அறிக்கை சமர்ப்பித்தது. இதற்கிடையில், இந்த குழுவை எதிர்த்து தமிழ்நாடு பா.ஜ.க பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும், கரு.நாகராஜன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம் என்றும் உத்தரவிட்டனர். இது, தமிழ்நாடு அரசின் முயற்சிக்கு கிடைத்த முதல் வெற்றியாக கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு, கடந்த 2006-ம் ஆண்டும் நுழைவுத்தேர்வு இருந்தது. அப்போது, நீதிபதி ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், அந்த நுழைவு தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதன் அடிப்படையிலேயே தற்போது, நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அளித்த அறிக்கையை ஒன்றிய அரசுக்கு அனுப்பி, விலக்கு பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. வெல்லட்டும் மாநில அரசின் முயற்சி. வழி விடட்டும் ஒன்றிய அரசு.
ஆண்டுதோறும் மருத்துவ மாணவர் சேர்க்கையில், தமிழ்நாட்டு மாணவர்கள் அதிக பிரதிநிதித்துவம் பெற்றுவந்த நிலை தற்போது முற்றிலும் மாறிவிட்டது. குறிப்பாக, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்தபோது தமிழ்நாட்டின் கடைக்கோடி மாணவனுக்கும் மருத்துவராகும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், நீட் தேர்வு, இதை தவிடு பொடியாக்கிவிட்டது.
நல்ல மதிப்பெண் பெற்ற, சமுதாயத்தில் பின்தங்கிய மாணவர்களின் மருத்துவ கனவு நொறுங்கிவிட்டது. இதன் எதிரொலியே தற்கொலை சாவுகளாக மாறியது. எனவே, நீட் தேர்வுக்கு மாற்றாக அனைவரும் பயன்பெறத்தக்க வகையில் மாணவர் சேர்க்கை முறைகளை வகுக்கவேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த விருப்பம்.