“வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்ல, சமூக வளர்ச்சியாகவும் இருக்கவேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெளிவாகக் கூறிவிட்டார். அவரது தலைமையின் கீழ் தமிழ்நாடு திராவிட மாடல் வளர்ச்சியைக் காணும் என்பதில் தமிழ்நாட்டு மக்கள் முழு நம்பிக்கையை கொண்டிருக்கிறார்கள்” என ‘தினத்தந்தி’ தலையங்கம் தீட்டியுள்ளது.
தினத்தந்தி நாளேட்டின் இன்றைய தலையங்கம் வருமாறு:
எந்தவொரு சாலையையும், பளபளக்கும் சாலையாக மாற்ற வேண்டுமென்றால், முதலில் குண்டும் குழியுமாக இருக்கும் நிலையை செப்பனிடவேண்டும். மேடுபள்ளங்களை சீர்செய்யவேண்டும். இப்படி பல பணிகளை செய்த பிறகுதான், அந்த சாலை சீர்மிகு சாலையாக மாறும். அதுபோலத்தான், நாட்டில் ஒரு முழுமையான வளர்ச்சியை கொண்டுவர வேண்டுமென்றால், பொருளாதார வீழ்ச்சி, நிதி பற்றாக்குறை ஆகியவற்றை போக்கி, உற்பத்தி வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், தனிநபர் வருமானத்தை பெருக்குதல், பணப்புழக்கத்தை அதிகரித்தல், வணிக வளர்ச்சி என்று எல்லா வளர்ச்சிகளையும் மேம்படுத்தவேண்டும்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று 68 நாட்கள் ஆகின்றன. இந்த குறுகிய காலத்தில், ஊரடங்கு நீட்டிப்பு, கொரோனா தடுப்பு நடவடிக்கை என, எந்த பணிகள் என்றாலும் நிபுணர்களின் ஆலோசனையை பெற்றே செயல்படுத்தி வருவது மிகவும் பாராட்டுக்குரியது. அந்தவகையில், கடந்த மாதம் 21-ந்தேதி கவர்னர் உரையில் ஒரு நல்ல அறிவிப்பை, அவர் தலைமையிலான அரசு வெளியிட்டுள்ளது. அதில், “பொருளாதார வளர்ச்சி மந்த நிலையிலுள்ள தமிழ்நாட்டை மாற்றியமைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு மேற்கொள்ளும். அரசிற்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கிட ‘முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு’ ஒன்றை அமைக்க இந்த அரசு முடிவு செய்துள்ளது.
அந்தக் குழுவில், அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் பேராசிரியரும், நோபல் பரிசு பெற்றவருமான எஸ்தர் டப்லோ, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், மத்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், பொருளாதார நிபுணர் ஜான் ட்ரீஸ், முன்னாள் மத்திய நிதிச் செயலாளர் எஸ்.நாராயண் ஆகிய உலகின் தலைசிறந்த பொருளாதார அறிஞர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் பொருளாதார ஆலோசனை குழு அறிவிப்பு வெளியானவுடன், தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை நியமிக்கக் கூடாதா?, தமிழ்நாட்டில் பொருளாதார நிபுணர்கள் இல்லையா? என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், போபாலில் பிறந்திருந்தாலும் ரகுராம் ராஜனின் பெற்றோர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். அரவிந்த் சுப்ரமணியன் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர். சென்னையில்தான் படித்திருக்கிறார். அவருடைய தாத்தா-பாட்டி, கலைஞர் வாழ்ந்த கோபாலபுரத்தில்தான் வாழ்ந்தவர்கள். கலைஞரை நன்கு தெரிந்தவர்கள். எஸ்.நாராயண் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி. தமிழ்நாட்டின் அரசிலும், ஒன்றிய அரசாங்கத்திலும் நிதித் துறை செயலாளராக இருந்த மிகச்சிறந்த அறிவாற்றல் கொண்டவர். அடுத்து, ஜான் ட்ரீஸ் மற்றும் எஸ்தர் டப்லோ ஆகியோர் தமிழ்நாட்டைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள்.
இந்த குழுவின் முதல் கூட்டத்தை கடந்த வாரம் வெள்ளிக்கிழமை காணொலிக்காட்சி மூலமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தினார். அப்போது, தன் அரசு கொண்டுவர விரும்பும் பொருளாதார வளர்ச்சி என்ன? என்பதை மிகத்தெளிவாக விளக்கி கூறினார். அவர்களிடம், “அனைத்து சமூகங்களையும், அனைத்து மாவட்டங்களையும், அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, இதுதான் திராவிட மாடல் என்பது. அந்த நோக்கத்தோடுதான் தமிழ்நாடு வளரவேண்டும் என்பது என்னுடைய ஆசை” என்றார்.
மேலும், “தொழில் வளர்ச்சி-சமூக மாற்றம்-கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்கவேண்டும். வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்ல, சமூக வளர்ச்சியாகவும் இருக்கவேண்டும். பொருளாதாரம்-கல்வி-சமூகம்-சிந்தனை-செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒருசேர வளரவேண்டும். அதுதான் பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் காணவிரும்பிய வளர்ச்சி. அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி” என்றார்.
ஆக, தான் முயற்சிக்கும் வளர்ச்சி இந்த திராவிட மாடல் வளர்ச்சிதான். இதற்குரிய ஆலோசனைகளை இந்த பொருளாதார நிபுணர்கள் தரவேண்டும் என்பதை மு.க.ஸ்டாலின் தெளிவாக கூறிவிட்டார். இனி அந்த திசையில் தமிழ்நாடு பயணம் செய்ய, இந்த புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்கள் ஆலோசனைகளை வழங்குவார்கள். அதை மு.க.ஸ்டாலின் நிச்சயம் நிறைவேற்றுவார். தமிழ்நாடு திராவிட மாடல் வளர்ச்சியைக் காணும் என்பதில் தமிழ்நாட்டு மக்கள் முழு நம்பிக்கையை கொண்டிருக்கிறார்கள், வாழ்த்துகிறார்கள்.
நன்றி: தினத்தந்தி