சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜகவை சேர்ந்த ஆதரவாளர்களும் இந்துத்துவ கட்சிகளை சேர்ந்தவர்களும் பெண்களைப் பற்றி மிகவும் கடுமையாக விமர்சிப்பது கூறி பன்னாட்டு பெண்கள் அமைப்பு சார்பிலும் மார்க்சிஸ்ட் கட்சி சமூக ஆர்வலர் சுந்தரவள்ளி சார்பிலும் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரில் சில யூடியூப் சேனலில் பெண்களைப் பற்றி மிகவும் அவதூறு பரப்பும் வகையில் ஆபாசமான வார்த்தைகளில் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த ராம ரவிக்குமார் பாஜக ஆதரவாளர் கிஷோர் கே ஸ்வாமி, கே சி திருமாறன் ஜி ஆகியோர் மிகவும் தரக்குறைவாக பேசி வருகின்றனர்.
குறிப்பாக சில தினங்களுக்கு முன்பு தமிழ் சைவ பேரவை தலைவர் சிவனடியாரான கலையரசி நடராஜன் சில மாதங்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் வரலாறு என்று கூறுவது உண்மையை சைவ சித்தாந்தத்தின்படி தெளிவாக எடுத்து வைத்தார்.
இதன் காரணமாக பாஜக ஆதரவாளர்களும் இந்துத்துவ அமைப்பைச் சார்ந்தவர்களும் அவர்களை கொச்சைப்படுத்தும் விதமாக யூடியூப் சேனல்களில் தொடர்ந்து பேசி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை காவல் துறை தரப்பில் எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
புகார் அளித்த பின்னர் சமூக ஆர்வலர் சுந்தரவல்லி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ”திமுக தலைவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பல்வேறு பாலியல் தொடர்பான குற்ற சம்பவங்களுக்கு உடனடியாக தக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
திமுக தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னர் பாலியல் தொடர்பான அனைத்து வழக்குகளும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஏற்படக்கூடிய சிறு சிறு மாற்றங்களில் இருந்து அவை அனைவருக்கும் தெரிய வருகிறது. குறிப்பாக பெண்களைக் குறித்து அவதூறாக பேசக்கூடிய அனைவர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” எனக் கூறினார்.