தமிழ்நாடு

“அ.தி.மு.க ஆட்சியில் கூட்டுறவு வங்கி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை” : அமைச்சர் ஐ.பெரியசாமி!

சொன்னதை மட்டுமின்றி சொல்லாததையும் செய்யக்கூடிய அரசாக தி.மு.க அரசு உள்ளது என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

“அ.தி.மு.க ஆட்சியில் கூட்டுறவு வங்கி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை” : அமைச்சர் ஐ.பெரியசாமி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தூத்துக்குடி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சார்பில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையம் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற தி.மு.க குழு துணைத் தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு பெட்ரோல் டீசல் விற்பனை மையத்தைத் திறந்து வைத்து விற்பனையையும் தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி பேசுகையில், “இந்தியாவில் விவசாயிகளுக்கு கடனை தள்ளுபடி செய்ய முடியாத நிலை இருந்தபோது, அப்போது தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர்தான் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்தார். அப்போது இந்தியாவே தமிழ்நாட்டை திரும்பிப் பார்த்தது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி விவசாயிகளின் முதுகெலும்பை நிமிரச் செய்தார்.

தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட விவசாயக் கடன், கல்விக் கடன் கூட்டுறவுச் சங்கங்களில் வைத்துள்ள நகைக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் தள்ளுபடி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. சொன்னதை மட்டுமின்றி சொல்லாததையும் செய்யக்கூடிய அரசு தி.மு.க அரசு.

கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் வங்கிகள் நகைக் கடன் மட்டுமின்றி அனைத்து வகையான கடன்களும் வழங்க வேண்டுமெனவும் இதன் மூலம் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெற வேண்டுமென முதலமைச்சர் தெரிவித்துள்ளார். கூட்டுறவுச் சங்கம் மற்றும் வங்கிகளில் ஏதும் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வுகள் முடிவுகள் வந்தவுடன் முறைகேடுகளில் ஈடுபட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories