தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களைப் பிரித்து கொங்கு நாடு என தனி மாநிலம் உருவாக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தொடர்ச்சியாக பா.ஜ.க தலைவர்கள் வானதி சீனிவாசன், கரு.நாகராஜன் உள்ளிட்ட பலர் பேசி வருகிறார்கள்.
பா.ஜ.க தலைவர்களின் இந்த பிரிவினைவாத பேச்சுக்கு, தமிழ்நாட்டில் பிரிவினை வாதத்திற்கு இடம் கிடையாது என்று எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், திமுக செய்தித் தொடர்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.எஸ் இளங்கோவன், அரசியலமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது மட்டுமல்ல அரசியல் தெரியாதவர்கள்தான் இப்படிப் பேசுவார்கள் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழ்நாட்டைப் பிரிக்க நினைப்பவர்கள் தமிழரின் எதிரிகள் என தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்திருக்கிறார். இது குறித்து பீட்டர் அல்போன்ஸ் வெளியிட்டுள்ள ட்விட்டரில்,"கை,கால்,கழுத்து என அவயங்களுக்கு தனி பெயர் இருந்தாலும் அவைகள் உடலோடு இருந்தால்தான் உயிரோடு இயங்கமுடியும்.
கொங்குநாடு,செட்டிநாடு,வருஷநாடு, நாஞ்சில்நாடு, மறவர்நாடு,தென்பாண்டிநாடு என்பதெல்லாம் தமிழ்நாட்டின் அங்கங்கள்! அவற்றை பிரிக்க நினைப்பவர்கள் தமிழின்,தமிழனின்,தமிழ்நாட்டின் எதிரிகள்! என பதிவிட்டுள்ளார்.