சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போலிஸார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். திண்டிவனம் அருகே ஊரக வளர்ச்சித்துறை என்று ஸ்டிக்கர் ஒட்டிய சொகுசு கார் ஒன்று வந்துள்ளது. சந்தேகம் அடைந்த போலிஸார் காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது, காரில் ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த மது பாட்டில்கள் இருப்பது கண்டறியப்பட்டது. பின்பு போலிஸார் நடத்திய விசாரணையில், ஸ்ரீபெரும்புத்தூரைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர் சந்தானம் மற்றும் கமல், சௌந்தராஜ் என்பது தெரிய வந்தது. (சந்தானத்தின் மனைவி வசந்தி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்) இவர்கள் தனது உறவினரான வளையகாரணை ஊராட்சி செயலரான புருஷோத்தமன் என்பவரது காரை எடுத்து வந்து புதுச்சேரியில் உள்ள திருக்கனூரில் மதுபாட்டில்கள் வாங்கிக் கொண்டு ஸ்ரீபெரும்புத்தூர் சென்றதாக தெரிய வந்தது.
இதையடுத்து போலிஸார் மதுபாட்டில் மற்றும் காரை பறிமுதல் செய்ததோடு இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டிவனம் அருகே ஊரக வளர்ச்சித்துறை என்று ஸ்டிக்கர் ஒட்டிய வாகனத்தில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த இந்தச் சம்பவம் இப்பகுதியில் உள்ள துறை சார்ந்த அலுவலர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.