முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் பா.ஜ.கவில் இணைந்தார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த அவர், தற்போது தமிழ்நாடு பா.ஜ.க தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்ணாமலை, கர்நாடகாவின் பெங்களூர் தெற்கு மண்டல துணை போலிஸ் கமிஷனராக பணியாற்றியபோதுதான் தனது வேலையை ராஜினாமா செய்தார். பின்னர் ஆர்.எஸ்.எஸ் குழுக்களோடு மறைமுகமாகப் பணியாற்றிய அண்ணாமலை, ஆட்டுக்குட்டிகளைத் தூக்கியபடி தற்சார்பு வாழ்க்கை வாழப்போவதாக அறிவித்த சில நாட்களிலேயே பா.ஜ.க-வில் இணைந்தார்.
கர்நாடகாவில் ஐ.பி.எஸ் பணியை ராஜினாமா செய்தபிறகு நடைபெற்ற பிரியாவிடைக் கூட்டத்தில், “நான் எப்போதுமே பெருமைமிக்க கன்னடன். பிறந்தது வேறு பக்கம் இருக்கலாம். கர்நாடகா வந்தபிறகு எனது திறமையை மட்டுமே நீங்கள் பார்த்தீர்கள்.
என்னை நீங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவனாகப் பார்க்கவில்லை. காவிரி பிரச்சினை வந்தபோது என்னை வேறு நபராக நீங்கள் பார்க்கவில்லை. எனது உயிர் இருக்கும் வரை, எனது உடலில் கடைசி மூச்சு இருக்கும் வரை, நான் ஒரு பெருமைமிக்க கன்னடன்.” எனப் பேசினார்.
இந்நிலையில், தமிழ்நாடு பா.ஜ.கவின் தலைவராகியிருக்கும் அண்ணாமலை, காவிரி உள்ளிட்ட விவகாரங்களில் கர்நாடகாவுக்கு ஆதரவாக நடப்பாரா, தமிழ்நாட்டுக்கு ஆதரவாகச் செயல்படுவாரா என கேள்வி எழுந்துள்ளது.
உயிர் உள்ளவரை நான் கன்னடன் என்று கூறிவிட்டு வந்துள்ள அண்ணாமலை, கர்நாடகாவுக்கு விசுவாசமாக இருப்பாரா இல்லை, பா.ஜ.க தலைவராக பொறுப்பேற்றுள்ள தமிழ்நாட்டிற்கு விசுவாசமாக இருப்பாரா என்பதை விளக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.