ஆவடியை சேர்ந்த வெங்கட் நாராயணன் என்பவர் தனது 16 ஏக்கர் நிலத்தை அபகரித்த பா.ஜ.க பிரமுகர் மீது புகார் அளிக்க வந்த நபர், சென்னை காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்தார். அவரை தடுத்து நிறுத்திய போலிஸார் விசாரணை நடத்தியதில், அவருக்கு சொந்தமான திருவள்ளூர் மாவட்டம் வயலாநல்லூர் கிராமத்தில் உள்ள 16 ஏக்கர் நிலத்தை விற்பதற்கான உரிமத்தை பா.ஜ.க பிரமுகர் ரமணன் மற்றும் அவரின் நண்பர் சதீஷ்குமாருக்கு வழங்கியுள்ளார்.
நிலத்தை விற்பனை செய்து தருவதாக கூறியவர்கள் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்வது வெங்கட்நாராயணா தம்பதியினருக்கு தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கடந்த 6ஆம் தேதி அன்று குடும்பத்துடன் வேப்பேரியில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நில அபகரிப்பு பிரிவில் புகார் அளித்துள்ளனர். மேலும், பூந்தமல்லி பத்திரப்பதிவு அலுவலகத்தில் விற்பனை உரிமத்தை ரத்து செய்ய தடங்கள் மனுவையும் நேற்று அளித்துள்ளனர்.
இதனை அறிந்த ரமணன் மற்றும் அவரது நண்பர்கள் வெங்கட் நாராயணன் வீடு புகுந்து அவரது மனைவி மற்றும் குழந்தையை கத்திமுனையில் மிரட்டி வெங்கட்நாராயணா வலுக்கட்டாயமாக பூந்தமல்லி பத்திரப்பதிவு அலுவலகம் அழைத்து வந்து மாலை 6 மணிக்கு மேல், 16 ஏக்கர் நிலத்தை வேறொரு பெயருக்கு மாற்றி பத்திரப்பதிவு செய்து உள்ளனர்.
இதனால், மனமுடைந்த வெங்கட்நாராயணா காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சித்தும் தெரியவந்தது. அவரை மீட்ட காவல்துறையினர் உடனடியாக வேப்பேரி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அனுப்பினர். மேலும் புகார் அளிக்க வந்த வெங்கட்நாராயணா மனைவி நித்யாவிடம் புகார் குறித்து விசாரணை நடத்தினர்.
பின்னர் இது குறித்து ஆவடி போலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதின் பேரில், பா.ஜ.க பிரமுகர்கள் சதீஷ்குமார், ரமணன், விக்னேஷ், திருப்பதி ஆகிய 4 பேர் மீதும் மோசடி செய்தல், கொலை மிரட்டல், கடத்தல் உள்ளீட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.