தெலங்கானா மாநிலத்தில், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி ஆட்சியில் இருக்கிறது. இம்மாநிலத்தின் முதல்வராக சந்திரசேகர் ராவ் உள்ளார்.
தெலங்கானா அரசின் பிரதான திட்டங்களில் ஒன்று இரட்டை படுக்கையறை கொண்டு வீடு வழங்கும் திட்டம். இந்த திட்டத்தின் அடிப்படையில் சிர்சிலாவில்1,320 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன.
இதையடுத்து, சிர்சிலாவில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளைப் பயனாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஞாயிறன்று நடைபெற்றது. இதில் முதல்வர் சந்திரசேகர் ராவ் கலந்து கொண்டார். அப்போது ரிப்பன் வெட்டி நிகழ்ச்சியைத் துவங்குவதற்காக முதல்வர் சந்திரசேகர் ராவ் தயாரானபோது, ரிப்பனை வெட்டுவதற்கான கத்தரிக்கோலை அவரிடம் கொடுக்க அதிகாரிகள் மறந்துவிட்டனர்.
பின்னர், கத்தரிக்கோல் எடுத்துவரத் தாமதம் ஆனதால், பொறுமை இழந்த முதல்வர் சந்திரசேகர் ராவ், கைகளால் ரிப்பனை கிழித்துவிட்டு, பயனாளர்களுடன் புதிதாகக் கட்டப்பட்ட வீட்டிற்குள் சென்று பார்வையிட்டார். தற்போது, முதல்வர் சந்திரசேகர் ராவ் பொறுமை இழந்து கைகளால் ரிப்பனை கிழித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.