சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடிகர் கார்த்தி, நடிகை ரோகிணி மற்றும் சில தயாரிப்பாளர்கள் ஆகியோர் முதமைச்சரை சந்தித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பாக கடிதம் ஒன்றை அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கார்த்தி, ''ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள ஔிப்பதிவு திருத்தச் சட்ட மசோதாவில் பைரசியை தடுப்பதற்கான நடவடிக்கைகள் உள்ளது. அது வரவேற்கதக்கது தான். ஆனால் திரைப்படங்களுக்கு சென்சார் பெறுவது தொடர்பான விதிமுறைகள் ஒட்டுமொத்த கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நெறிக்கும் செயலாக உள்ளது.
இந்த புதிய சட்டதிருத்த மசோதா நிறைவேறினால் தணிக்கை செய்யப்பட்ட திரைப்படங்களை எந்த சூழ்நிலையிலும், உடனடியாக ஒன்றிய அரசு தடை செய்யலாம் என்ற நிலை ஏற்படும். பெரியளவில் பணத்தையும் உழைப்பயைும் போட்டு எடுக்கப்படும் திரைப்படங்களை அப்படி தடை செய்வது முறையானதல்ல.
இதனால் இந்திய இறையாண்மை மட்டுமின்றி, ஜனநாயக மற்றும் கருத்து சுதந்திரத்திற்கும் ஆபத்து ஏற்படுவதோடு, திரைத்துறையை சார்ந்துள்ள அனைவரின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும்.
இந்த சந்திப்பின் மூலம் எங்கள் சார்பாக தமிழ்நாடு முதலமைச்சரின் மேலான கவனத்திற்கு இந்த விவகாரத்தை கொண்டு வந்துள்ளோம். நிச்சயம் கவனம் செலுத்தி, முழு ஒத்துழைப்பு வழங்குவதாக முதலமைச்சர் கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் அனைத்து வகையிலும் ஒன்றிய அரசுக்கு எங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம். அவை புறக்கணிக்கப்படும் பட்சத்தில் அடுத்தடுத்து சட்டரீதியாக என்னென்ன முன்னெடுப்புகளை மேற்கொள்ள முடியுமோ அதையெல்லாம் செய்ய தயாராக உள்ளோம்"
எனக் கூறியுள்ளார்.