அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும் தற்போதைய விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சி.விஜயபாஸ்கரின் நெருங்கிய ஆதரவாளர் ஏ.கருணாகரன். இவர் புதுக்கோட்டை காமராஜபுரம் 34ம் வீதியில் வசித்து வருகிறார்.
அதேபோல், புதுக்கோட்டை சுப்பிரமணியபுரம் 1வது வீதியைச் சேர்ந்தவர் பி.ஆறுமுகம். இவரிடம் கருணாகரன் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கேன்டீன் நடத்துமாறும், அதற்கு ரூபாய் 15 லட்சம் முன்பணம் தருமாறும் கேட்டுள்ளார்.
பின்னர் இதற்கு ஆறுமுகம் சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, 2017ம் ஆண்டு கருணாகரனிடம் ரூபாய் 15 லட்சம் கொடுத்திருக்கிறார். இதையடுத்து ரூபாய் 16 லட்சம் செலவு செய்து, கேன்டீனில் உள்கட்டமைப்புப் பணிகளைச் செய்ததோடு, தினசரி வாடகையாக ரூபாய் 10 ஆயிரம் கர்ணனிடம் கொடுத்து வந்துள்ளார் ஆறுமுகம்.
இப்படி சுமார் 15 மாதங்களாக ஆறுமுகம், கருணாகரனுக்குப் பணம் கொடுத்து வந்துள்ளார். இதையடுத்து ஆறுமுகத்திடம் ரூபாய் 10 லட்சம் முன்பணம் தரவேண்டும் என்றும் தினசரி வாடகை ரூபாய் 10 ஆயிரத்துடன் கூடுதலாக 10 ஆயிரம் ரூபாய் சேர்த்து 20 ஆயிரம் ரூபாயாக வழங்க வேண்டும் என கருணாகரன் கூறியுள்ளார்.
இதற்கு ஆறுமுகம் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கருணாகரன் ஆறுமுகத்தை வெளியேற்றிவிட்டு வேறு நபரை கேண்டீன் நடத்த அனுமதி அளித்துள்ளார். பின்னர் ஆறுமுகம் முன்பணமாகக் கொடுத்த ரூபாய் 15 லட்சத்தைத் திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். இதற்குக் கருணாகரன் பணத்தைக் கொடுக்க மறுத்து வருவதோடு, ஆறுமுகத்திற்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஆறுமுகம், கருணாகரன் மீது முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அப்போதைய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆகியோரிடம் பல முறை புகார் மனு அளித்திருக்கிறார். ஆனால் யாரும் கருணாகரன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில், கருணாகரனிடம் கொடுத்த முன்தொகை 15 லட்சம் ரூபாயை மீட்டுத் தர வேண்டும் என கோரியும், எனக்கும், எனது, குடும்பத்தினருக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி ஆறுமுகம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபனிடம் புகார் மனு அளித்துள்ளார். இந்தப் புகார் மனு அளிக்கும்போது ஆறுமுகத்தின் மகள்களும் கண்ணீர் மல்க உடனிருந்தனர்.