சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத சடலம் கிடப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உடலை கைப்பற்றிய கோட்டூர்புரம் போலிஸார் சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் எரிந்த நிலையிலிருந்த உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டது.
பின்னர், போலிஸார் நடத்திய விசாரணையில், இறந்தவர் கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன் நாயர் என்பது தெரியவந்தது. மேலும் இவர் கேரளாவில் பி.டெக் படிப்பை முடித்துவிட்டு 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐ.ஐ.டி-யில் பிராஜெக்ட் அசோசியேட்டாக சேர்ந்திருக்கிறார். இவர் வேளச்சேரியில் வீடு வாடகைக்கு எடுத்துத் தங்கி பணியாற்றி வந்துள்ளார்.
இதையடுத்து போலிஸார், உன்னி கிருஷ்ணன் தங்கியிருந்த வேளச்சேரி வீட்டில் ஆய்வு செய்தனர். அப்போது, 11 பக்கம் கொண்ட தற்கொலை கடிதம் கிடைத்தது. அதில் மன அழுத்தம் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டதாக அவர் எழுதி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அவருடன் வசித்துவரும் கேரளாவைச் சேர்ந்த அனில்குமார், சேலத்தைச் சேர்ந்த பிரகாஷ் ஆகியோரிடமும் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உன்னி கிருஷ்ணனின் தந்தை ரகு இஸ்ரோ விஞ்ஞானி என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் கேரளாவைச் சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டார். தற்போது தற்காலிக ஊழியர் தற்கொலை செய்து கொண்டிருப்பது ஐ.ஐ.டி மாணவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.