தமிழ்நாடு

“ஒன்றிய நிதியமைச்சரின் அறிவிப்பு யாருக்கும் பயன்தராது.. இதுதான் பிரமாதமா?”: வெளுத்து வாங்கிய ப.சிதம்பரம்!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிக்கப்பட்ட பொருளாதாரத் தொகுப்பு யாருக்கும் பயன்தராத அறிவிப்புகளே என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் சாடியுள்ளார்.

“ஒன்றிய நிதியமைச்சரின் அறிவிப்பு யாருக்கும் பயன்தராது.. இதுதான் பிரமாதமா?”: வெளுத்து வாங்கிய ப.சிதம்பரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கொரோனா 2-ஆவது அலை ஏற்படுத்திய பாதிப்புகளிலிருந்து நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், திங்களன்று சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 8 பொருளாதார ஊக்கத் திட்டங்களை அறிவித்தார்.

பிரதமர் மோடியும் இதனை ‘பிரமாதம்’ என்று பாராட்டி புகழ்ந்திருந்தார். இந்நிலையில், 2020-இல் ‘ஆத்மநிர்பர் பாரத் அபியான்’ என்ற பெயரில் ரூ.21 லட்சம் கோடிக்கு அறிவிக்கப்பட்ட பொருளாதாரத் தொகுப்பு போல இவையும் யாருக்கும் பயன்தராத அறிவிப்புகளே! என்ற ரீதியில் ஒன்றிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

இந்த அறிவிப்புகளால் உண்மையில் என்ன நடக்கும்? என்பதையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார். “கடன் உத்தரவாதம் என்பது கடன் அல்ல.. எந்த வங்கியும் அதீதகடன் நெருக்கடியில் இருக்கும் நிறுவனங்களுக்குக் கடன் அளிக்காது. எனவே, ஒன்றிய நிதியமைச்சர் அறிவித்த ‘புதியகடன்’ என்பது கூடுதல் சுமைதான்.

அதீதக் கடன் நெருக்கடி அல்லது நிதிப் பற்றாக்குறையில் இருக்கும் நிறுவனங்களுக்கு தற்போதைய தேவை கடன் சேவையில்லை. கடன் அல்லாத மூலதனம் தான் தேவை” என்று கூறியிருக்கும் ப.சிதம்பரம், “அதிகப்படியான வழங்கல் (Supply - சப்ளை) மூலம் தேவையை (Consumption - நுகர்வு) உருவாக்க முடியாது. ஆனால், அதிக தேவையை (Consumption - நுகர்வு) உருவாக்கும்போது தானாகவே வழங்கலும் அதிகரிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், “நாட்டின் தற்போதைய டிமாண்ட் அளவீடு மிகவும் மோசமாக உள்ளது” என்று தெரிவித்திருக்கும் அவர், “கோடிக்கணக்கானோர் வேலைவாய்ப்பை இழந்தும், கோடிக்கணக்கானோரின் வருமானம் குறைந்தும் இருக்கும் நாட்டில் டிமாண்ட் மூலம் நாட்டின் பொருளாதாரம் மேம்படாது, இந்தியாவின் தற்போதைய நிலையைச் சமாளிக்க, பணத்தை, துறை வாரியாக நிறுவனங்களில் போடாமல் மக்கள் கையில் - குறிப்பாக, ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கையில் கொடுப்பது தான் சிறந்த வழி” எனவும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

மேலும், நிதியமைச்சரின் அறிவிப்பில் சுற்றுலாத்துறை நிறுவனங்களுக்கு அதிகளவிலான கடன் உத்தரவாதம் அளிக்கப்பட்டு உள்ளதை குறிப்பிட்டுள்ள ப.சிதம்பரம், “இதில் கடன் வாங்கிய ஒரு நிறுவனம், மக்கள் மத்தியில் பணப் புழக்கம் இல்லாத காரணத்தால் வர்த்தகத்தை நடத்த முடியாமல் போனால், அவர்களுக்கு தற்போது அளிக்கப்படும் கடன் வராக் கடனாகத் தானே மாறும்...?” என்பதை சுட்டிக்காட்டும் ப.சிதம்பரம், எனவே, “தற்போதைய சூழலில் மக்கள் கைகளுக்குப் பணம் போவது மட்டுமே வர்த்தகம் மற்றும் டிமாண்ட்டை அதிகரிக்கும்” என்றும் ப.சிதம்பரம் தெளிவுபடுத்தியுள்ளார்.

banner

Related Stories

Related Stories