பள்ளிக்கல்வித் துறையின் அலட்சியத்தால் 6.36 லட்சம் பாட புத்தகங்களை மீண்டும் அச்சிட்டதால் ரூ.23 கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பது இந்திய தணிக்கைத்துறை அறிக்கையில் அம்பலமாகியுள்ளது.
இது குறித்து இந்திய தணிக்கை துறை அறிக்கையில் கூறியிருப்பதாவது: -
கடந்த 2014 அக்டோபரில் 11,12ம் வகுப்புகளுக்கான பல்வேறு பாடநூல்களின் 1.36 கோடி பிரதிகளை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி பணிகள் கழகம் அனைத்து பாடங்களுக்குமான பாடநூல்களையும் அச்சிட்டது. அதன் பின்னர் கடந்த 2015 ஜூனில் 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு உரிய 2 பாடங்களுக்கான பாடநூல்களின் 6 லட்சத்து 36 ஆயிரத்து 900 பிரதிகளை உடனடியாக அச்சிட்டு வழங்குமாறு பள்ளி கல்வி இயக்குனர் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி பணிகள் கழகத்துக்கு கோரினார்.
பள்ளி கல்வி இயக்குனர் தெரிவித்தப்படி அந்த பாட புத்தகங்களில் இருந்த சில கருத்தியல் பிழைகளை பாட ஆசிரியர்கள் சுட்டிகாட்டியதால் இந்த மறுஅச்சு தேவைப்பட்டது. பள்ளி கல்வித்துறை இயக்குனரால் சுட்டிகாட்டப்பட்ட இந்த கருத்தியல் பிழைகள் அனைத்து புத்தகங்களிலும் அணிந்துரை மற்றும் முன்னுரையிலும் மற்றும் இந்த 8 புத்தகங்களில் ஒன்று முதல் 8 உட்பக்கங்களிலும் இருந்ததை தணிக்கை கண்டறிந்தது. பள்ளி கல்வித்துறை இயக்குனர் கோரிய படி தமிழ்நாடு பாடநூல் கழகம் திருத்தப்பட்ட பாடநூல்களை அச்சிட்டு அதற்கான விலை ரூ.1.42 கோடி கோரிய நிலையில் 2016 மார்ச் மாதம் வழங்கப்பட்டது.
கடந்த 2019 நவம்பர் 18ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பள்ளி கல்வித்துறைக்கான அரசின் முதன்மை செயலாளர் அணிந்துரை மற்றும் முன்னுரை ஆகியவற்றை நீக்கியது ஒரு கொள்கை முடிவு எனவும், அதனால் மீண்டும் அச்சிட்டது தவிர்க்க இயலாதது என கூறி னார். தவறுகளை தவிர்க்கும் வகையில் பாடநூல்களை அச்சிடுவதற்கு முன் அவற்றை ஆய்வு செய்வதற்கான ஒருமுறை 2017-18 முதல் அமலில் இருப்பது சுட்டிகாட்டப்பட்டது. எனினும் அச்சிட, மீண்டும் அச்சிட கோரிக்கை அனுப்புவதற்கு முன்பு பள்ளி கல்வித்துறை இயக்குனர் பாட புத்தகங்களை சரி பார்க்கவில்லை என்பதே உண்மையாக இருந்தது.
இவ்வாறு தமிழ்நாடு பாடநூல் கழகம் கோரிய தொகைகளின் சரித்தன்மையை ஆய்வு செய்ய பள்ளி கல்வித்துறை இயக்குனர், தொடக்க கல்வி இயக்குனர் தவறியதால் பாடநூல்களில் இருந்த தவறுகளை களைய பள்ளிகல்வித்துறை இயக்குனர் தவறியதால் அரசுக்கு ரூ.23.27 கோடி தவிர்த்திருக்ககூடிய செலவு ஏற்பட்டது.