தமிழ்நாடு

“அரசு வழிகாட்டுதலின்படி 27 மாவட்டங்களில் 9333 பேருந்துகள் இயக்கப்படும்”: அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு!

இயக்கப்படுகின்ற பேருந்துகளை உரிய முறையில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து, அரசு விதித்துள்ள நெறிமுறைகளைப் பின்பற்றி இயக்கிடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

“அரசு வழிகாட்டுதலின்படி 27 மாவட்டங்களில் 9333 பேருந்துகள் இயக்கப்படும்”: அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

வரும் 28.06.2021 முதல் 50 சதவிகித பயணிகளுடன், ஏற்கனவே அனுமதித்துள்ள 4 மாவட்டங்களுடன், கூடுதலாக 23 மாவட்டங்கள் என ஆகமொத்தம் 27 மாவட்டங்களில், 9,333 பேருந்துகள் இயக்கம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கோவிட்-19 நோய்த் தொற்றின் காரணமாக அமுலில் உள்ள, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கினை, 28.06.2021 முதல் 05.07.2021 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்கள்.

இந்த உத்தரவில், வகை 2-ல் குறிப்பிட்டுள்ளவாறு, அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கிடையேயும் பொதுப் பேருந்து போக்குவரத்தினை, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர் சாதன வசதி இல்லாமல், 50 சதவிகித இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி அளித்துள்ளார்கள்.

“அரசு வழிகாட்டுதலின்படி 27 மாவட்டங்களில் 9333 பேருந்துகள் இயக்கப்படும்”: அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு!

ஏற்கனவே, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், வகை 3-ல் குறிப்பிட்டுள்ளவாறு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கிடையே பொதுப் பேருந்து போக்குவரத்தினை, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர் சாதன வசதி இல்லாமல், 50 சதவிகித இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி அளித்து தற்போது இயக்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், ஏற்கனவே அனுமதித்துள்ள 4 மாவட்டங்களுடன், கூடுதலாக 23 மாவட்டங்கள் என ஆகமொத்தம் 27 மாவட்டங்களில், வரும் 28.06.2021 காலை 6.00 மணி முதல், 50 சதவிகித இருக்கைகளுடன், மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கு இடையேயும் இயக்கப்படுகின்றன.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள மொத்தம் 19.290 பேருந்துகளில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 2200 பேருந்துகளும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 365 பேருந்துகளும், விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 2,210 பேருந்துகளும், சேலம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 513 பேருந்துகளும், கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், 1.592 பேருந்துகளும், மதுரை அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 1,300 பேருந்துகளும் மற்றும் திருநெல்வேலி அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 1153 பேருந்துகள் என மொத்தமாக 9,333 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணிகளின் வருகைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இயக்கப்படுகின்ற பேருந்துகளை உரிய முறையில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து, அரசு விதித்துள்ள நெறிமுறைகளைப் பின்பற்றி இயக்கிடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அரசு விதித்துள்ள வழிக்காட்டு முறைகளான, கட்டாய முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியினைப் பின்பற்றி பயணித்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories