பா.ஜ.க ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றச்செயலில் அதிகம் ஈடுபடுவதாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளன.
அதுமட்டுமல்லாது பெண்கள் விஷயத்தில் நாடுமுழுவதுமே பா.ஜ.கவினர் ஒரேமாதிரியாக இருப்பதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது. குறிப்பாக, பா.ஜ.கவில் பணியாற்றும் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவிவருவதாக பா.ஜ.கவில் உள்ள பெண்களே தெரிவித்து வருகின்றன.
தமிழ்நாட்டிலும் கூட விழுப்புரம் மாவட்டத்தின் தற்போதைய பா.ஜ.க தலைவராக இருக்கும் வி.ஏ.டி.கலிவரதன் தன்னை அடைத்துவைத்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டுவதாக அதே கட்சியின் மாவட்ட மகளிர் அணி பொதுச்செயலாளர் காயத்ரி சமீபத்தில் புகார் எழுந்தது.
மேலும் பல்வேறு புகார்கள் பா.ஜ.க தலைவர்களுக்கு எதிராக உள்ள நிலையில் தற்போது இந்த விவகாரம் பா.ஜ.க மேலிடம் வரைச் சென்றதால், அந்த கட்சியின் தேசிய செயலரும், மேலிட பார்வையாளருமான சி.டி.ரவி பா.ஜ.க தலைவர்களை வார்த்தைகளால் வறுத்தெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 19ம் தேதி பா.ஜ.கவின் தேசிய செயலரும், மேலிட பார்வையாளருமான சி.டி.ரவி தலைமையில் மகாபலிபுரத்தில் ஒரு நட்சத்திர ஓட்டலில் கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. அந்த கூட்டத்தில் பா.ஜ.க மாநில தலைவர்கள், முன்னாள் தேசிய தலைவர், அமைப்பு செயலர், கோர் கமிட்டி உறுப்பினர்கள் முன்னாள் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட 25 பேர் கலந்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்த கூட்டத்தில், தேர்தலில் பா.ஜ.க தோல்வி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளது. அதில் முக்கியமாக கூட்டத்தில் மேலிட பார்வையாளரிடம் அனைவரும் கடுமையாக திட்டுவதற்காகவே அத்தகைய கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது போல் அமைந்ததாக கூட்டத்தில் கலந்துக்கொண்டு பா.ஜ.கவினர் புலம்பியுள்ளனர்.
இதுதொடர்பாக பா.ஜ.க நிர்வாகி ஒருவர் பேச்சை தனியார் செய்தி நாளிதல் ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் அவர் கூறியதாவது, “சி.டி.ரவி ரவி கடுமையான கோபத்தில் இருந்தார். முருகன், விநாயகம் என ஒருவரையும் விட்டுவைக்கவில்லை; எல்லாரையும் ஒரேமாதிரியாக வசைப்பாடினார். கட்சியின் தோல்வியைவிட, பெண்கள் விவகாரத்தில் கட்சிக்கு வந்துள்ள புகார்கள் தான் அவரின் கோபத்திற்கு காரணம்.
குறிப்பாக, நான் இங்கு யாரையும் விசாரிக்க வரவில்லை; எங்களிடம் வந்த புகார்களின் நம்பகத்தன்மையை விசாரித்து விட்டுதான் வந்து பேசுகிறேன் என கூறியுள்ளார். மேலும் விசாரணையில் தெரியவந்துள்ள குற்றச்சாட்டு அனைத்தும் அருவெறுப்பின் உச்ச கட்டம் என்று கொந்தளித்துள்ளார் சி.டி.ரவி.
அதுமட்டுமல்லாது, ஒரு தலைவர் மீது மட்டும் சுமார் 134 புகார்கள் வந்துள்ளதாகவும், அவ்வளவு புகார்கள் வந்த தலைவர்கள் மீது மக்கள் மற்றும் நிர்வாகிகள் எந்த அளவுக்கு கோபத்தில் இருந்திருப்பார்கள். இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போதே, தமிழ்நாடு பா.ஜ.க தலைவர்கள் யாரும் அதனைத் தடுக்க முன்வரவில்லை.
எனவே இனி இதுபோல சம்பவங்களை தவிர்க்கவேண்டும். அதனால் இனி தமிழ்நாடு பா.ஜ.க தலைவர்கள் யாரும் நட்சத்திர ஓட்டல்களுக்கு செல்லக் கூடாது. அங்கு ரூம் எடுத்து தங்கி கட்சி பணிகளை செய்யக்கூடாது. கட்சிப்பணிகளை செய்வதாகக் கூறி, அங்கு பெண்களை வரவழைத்து கூத்தடிப்பது போன்ற செயல்களை நிறுத்திக் கொள்ளவேண்டும்.
ஒருவேளை கட்சி ரீதியிலான பணிக்கு சென்று, நட்சத்திர ஓட்டலில் தங்கியதாக தகவல் வந்தால், கட்டாயம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதனை குறிப்பாக ஏன் சொல்கிறேன் என்றால், பெண்களை வரவழைத்து கும்மாளம் அடிப்பது தொடர்பான ஆதாரம் எங்களிடம் உள்ளது. இல்லை என்று மறுத்தால், அதனை நிரூப்பிக்கவும் தயாராக இருக்கிறேன்.
மேலும், கட்சிப் பணித் தொடர்பாக பா.ஜ.க தலைவர்களும் பெண் நிர்வாகிகளும் ஒன்றாக வெளி இடங்களுக்கு செல்லவேண்டியது இருந்தால், எக்காரணம் கொண்டும், ஒரே விடுதியில் தங்கக் கூடாது. மீறி தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், அருகருகே ரூம் எடுத்து தங்கக்கூடாது.
அப்படி தங்கி, அதில் புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென்று உத்தரவிட்டுள்ளார். ஊரெல்லாம் விசாகா கமிட்டி அமைத்து, பெண்கள் தொடர்பான பாலியல் புகார் மீது விசாரிக்க வலியுறுத்தி கொண்டிருக்கும் நாமே, நம்மிடையே இருப்போர் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து, விசாகா கமிட்டி அமைக்க வலியுறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டு விடும்.
இப்படியே போனால், கமலாலயத்துக்குள் கட்டாயம் விசாகா கமிட்டி ஒன்று அமைத்தாக வேண்டும் தான் என்று கூறியுள்ளார். புகார்கள் யார் மீது அதிகம் வந்ததோ அவர்களை அருகில் வைத்துக்கொண்டு திட்டி தீர்த்துள்ளார் சி.டி.ரவி” என அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.