தமிழ்நாடு

“வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு தொடர்பாக ஆலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும்” - முதலமைச்சர் பதில்!

வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு தொடர்பாக ஆய்வு நடத்தி, நிச்சயமாக ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு தொடர்பாக ஆலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும்” - முதலமைச்சர் பதில்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு தொடர்பாக ஆய்வு நடத்தி, நிச்சயமாக ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த ஜூன் 21ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதையடுத்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற்ற விவாதத்தில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு தொடர்பாக, பா.ம.க உறுப்பினர் ஜி.கே.மணி பேசினார்.

அதற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உள்ள 20 விழுக்காடு ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 10.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்த வேண்டும் என்று ஜி.கே.மணி தெரிவித்தார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு, பா.ம.கவின் நிறுவனர் ராமதாஸ், இவர் மூலமாக ஒரு கடிதத்தையும் எனக்கு அனுப்பியிருக்கிறார். அதில் அவர் பல்வேறு பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி, இதனுடைய முக்கியத்துவத்தை, இதிலுள்ள பிரச்சினைகளை எல்லாம் எடுத்துச் சொல்லி, நிறைவாகக் குறிப்பிடுகிறபோது, 'தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான தமிழ்நாடு சட்டம் எண் 8/2021-ஐ விரைந்து செயல்படுத்தும்படியும், அதற்குத் தேவையான அரசாணைகள் மற்றும் வழிகாட்டுதல்களை உடனடியாகப் பிறப்பிக்கும்படியும்' கேட்டிருக்கிறார்.

நான் இதையெல்லாம் அடிப்படையாக வைத்து இங்கே சொல்ல விரும்புவது, ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து கொரோனா தொற்றைக் குறைப்பதற்காக இரவு பகல் பாராது கவனம் செலுத்தி, இப்போதுதான் கொஞ்சம் மூச்சு விட ஆரம்பித்திருக்கிறோம்.

ஆகவே, உறுப்பினருடைய கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரிகளோடு விரிவாக ஆலோசனையும், ஆய்வும் நடத்தி, நிச்சயமாக ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும் என்ற அந்த உறுதியை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories