இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாவது அலையில் இருந்து மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டுக் கொண்டிருக்கும் வேளையில் புதிதாக டெல்டா வைரஸின் திரிபான டெல்டா ப்ளஸ் வைரஸால் இதுவரையில் 22 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. இந்த வகை கொரோனா இதுவரை பரவியதை விடவும் அதிவேகமாக பரவக்கூடிய திறனுடையது என்றும் ஒரு புறம் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தாலும் எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுகாறும் தெரிவிக்கப்படவில்லை.
மகராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசத்தில் மட்டுமே பதிவாகியிருந்த டெல்டா ப்ளஸ் வைரஸ் பாதிப்பு தற்போது தமிழ்நாட்டிலும் பதிவாகியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த ஒரு நபருக்கு டெல்டா ப்ளஸ் வகை கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியுள்ளார்.
டெல்டா ப்ளஸ் கொரோனாவுக்கு ஆளானவருடன் தொடர்பில் இருந்த அனைவரது தகவல்களையும் சுகாதாரத்துறை குழு சேகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.