தமிழ்நாடு

அரசுடனான உறவு வேறு; கொள்கை வேறு என்பதன் தெளிவு - நல்லிணக்கத்தின் அடையாளம் முதலமைச்சர் பிரதமர் சந்திப்பு!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய பிரதமர் மோடியின் சந்திப்பு குறித்து தினத்தந்தி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.

அரசுடனான உறவு வேறு; கொள்கை வேறு என்பதன் தெளிவு - நல்லிணக்கத்தின் அடையாளம் முதலமைச்சர் பிரதமர் சந்திப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக 17ந்தேதியன்று டெல்லிக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.

"பிரதமருடனான இந்த சந்திப்பு மன நிறைவான, மகிழ்ச்சி தரும் சந்திப்பாக இருந்தது" என்று மு.க.ஸ்டாலின் கூறினார். நமது முதல்-அமைச்சர் பிரதமரை முதன்முதலில் சந்திக்கிறார். இருவரும் எதிர் எதிர் கொள்கைகளை கொண்டவர்கள். தேர்தலில் எதிரணியில் இருந்தவர்கள். இந்த சந்திப்பு எப்படி இருக்குமோ? என்று தமிழக மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். மக்களவையில் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த பெரிய எதிர்க்கட்சி, தேசிய அளவில் எதிர்க்கட்சி தலைவர்கள் வரிசையில் முக்கிய இடத்தை பெற்றுள்ளவர் மு.க.ஸ்டாலின் என்ற வகையில், நாடு முழுவதும் இந்தச் சந்திப்பை உற்றுநோக்கிக் கொண்டிருந்தது.

ஆனால், கட்சியின் கொள்கை வேறு, மத்திய - மாநில அரசுகளின் உறவு வேறு என்பதை இருபெரும் தலைவர்களும் நன்றாக கடைப்பிடிப்பதில் உள்ள தெளிவு இந்த சந்திப்பில் தெரிந்தது. மத்திய -மாநில அரசுகளின் இடையே இருக்க வேண்டிய ஒரு நல்லிணக்கத்தின் அடையாளமாக இந்த சந்திப்பு இருந்தது. "தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பை தருவேன்" என்ற வாக்குறுதியை பிரதமர், மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். "எந்த கோரிக்கையாக இருந்தாலும் என்னோடு எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம்" என்று வெளிப்படையாகவே மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் நரேந்திரமோடி கூறினார். "உறவுக்கு கை கொடுப்போம். உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற தலைவர் கலைஞரின் கொள்கையை பின்பற்றி எங்கள் நடைமுறை நிச்சயம் இருக்கும்" என்று இந்தச் சந்திப்புக்கு பிறகு மு.க.ஸ்டாலின் கூறியதில் இருந்து, மத்திய அரசாங்கத்துடன் மு.க.ஸ்டாலின் அரசு நல்லுறவோடும் இருக்கும், அதே நேரத்தில் தனது உரிமையையும் விட்டு கொடுக்காது என்பதும் தெரிகிறது.

இந்த சந்திப்பை பயன்படுத்தி, தமிழ்நாட்டுக்கு தேவையான முக்கிய திட்டங்கள் அனைத்தையும் பட்டியலிட்டு மு.க.ஸ்டாலின் கொடுத்திருக்கிறார். குறிப்பாக, "கொரோனா பரவல் அதிகம் உள்ள இந்த நேரத்தில், கூடுதலான தடுப்பூசிகளை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். செங்கல்பட்டு மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தடுப்பூசி தயாரிக்கும் தொழிற்சாலைகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும். தமிழகத்துக்கு வர வேண்டிய நிதி ஆதாரங்களை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும். சரக்கு சேவை வரி பாக்கியை முழுமையாக தமிழ்நாட்டுக்கு தர வேண்டும். நீர்ப் பிரச்சினை தீர்க்க நடவடிக்கை. ‘நீட்’ உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்" என்பதில் தொடங்கி, தமிழ்நாட்டுக்கு தற்போது தேவைப்படும் அனைத்து திட்டங்களையும் வரிசைப்படுத்தி கோரிக்கை மனுவாக கொடுத்தது மட்டுமல்லாமல், அதற்கான காரண காரியங்களையும் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடியும், "தமிழக முதல்-அமைச்சர் சந்தித்திருக்கிறார். மனு தந்திருக்கிறார்" என்பதோடு விட்டுவிடாமல், "நான் பரிசீலிக்கிறேன்" என்று மட்டும் சொல்லி முடிக்காமல், "நான் சம்பந்தப்பட்ட மந்திரிகள், அதிகாரிகளுடன் கலந்து பேசி நிச்சயம் நல்ல முடிவு எடுப்பேன். நம்பிக்கையுடன் இருங்கள்" என்று உறுதியளித்தது, ஒரு நல்ல நம்பிக்கையை மு.க.ஸ்டாலினுக்கு மட்டுமல்லாமல், தமிழக மக்களுக்கும் ஏற்படுத்தியுள்ளது. முதல்-அமைச்சரின் பிரதமருடனான இந்தச் சந்திப்பு ஒரு நல்ல ஒளியை காட்டுகிறது. பிரதமர் சம்பந்தப்பட்ட மந்திரிகள், அதிகாரிகளுடன் கலந்து பேசுவேன் என்று கூறியிருக்கிறார். முதல்-அமைச்சர் மனுவில் உள்ள கோரிக்கைகளை நிச்சயம் சம்பந்தப்பட்ட மத்திய மந்திரிகளுக்கும், அதிகாரிகளுக்கும் அனுப்பிவைப்பார்.

இனி தமிழ்நாட்டிலும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், துறை செயலாளர்கள் டெல்லியில் உள்ள அந்தத் துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு, தேவைப்பட்டால் நேரில் சென்று சந்தித்து, ஒவ்வொரு கோரிக்கையையும் நிறைவேற்றுவதற்கான தொடர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதில் எத்தனை கோரிக்கைகளை மத்திய அரசாங்கம் உடனடியாக நிறைவேற்றும்? என்பதையும், எத்தனை கோரிக்கைகளை தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள் நிறைவேற்றுவதற்கான முயற்சியில் வெற்றி பெறுவார்கள்? என்பதையும் தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

banner

Related Stories

Related Stories