தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேர்கொண்டு வருகின்றது.கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் பொதுமக்கள் அதிக அளவில் தடுப்பூசி செலுத்தி கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மாவட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமாக 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருப்பூர் ஆண்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலராக பணியாற்றி வருபவர் பிரவின் என்பவரை அதிமுக பிரமுகர் ஒருவர் தடுப்பூசி டோக்கன் கேட்டு மிரட்டும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தடுப்பூசி செலுத்தும் பணியில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வரும் நிலையில், இவருக்கு அரசியல் சார்ந்த பல தரப்பினரும் தடுப்பூசி டோக்கன் கேட்டு நச்சரித்து வந்துள்ளனர். இதில் அ.தி.மு.கவை சேர்ந்த திருப்பூர் இளைஞர் இளம்பெண் பாசறை செயலாளர் பரமராஜ் என்பவர் ஒரு படி மேலே சென்று, “தான் பல்லடம் எம்.எல்.ஏ எம்.எஸ்.எம்.ஆனந்தன் பி.ஏ பேசுகிறேன்; எங்களுக்கு தடுப்பூசி செலுத்தும் டோக்கன்களை வழங்க வேண்டும்; உயரதிகாரி உங்களிடம் சொல்லவில்லையா” என கேட்டுள்ளார்.
ஆனால், மருத்துவ அலுவலர் பிரவீன், “வரிசையில் நீண்ட நேரமாக காத்திருக்கும் மக்களுக்கு தான் முன்னுரிமை அளிக்க முடியும். தங்களுக்கு வழங்க முடியாது. ஏன் தன்னை தொடர்ந்து தொந்தரவு செய்கிறீர்கள். யார் சொன்னார்களோ அவர்களிடம் இருந்து உரிய அனுமதி வாங்கி வாருங்கள். நான் இது தொடர்பாக சுகாதார துறை அமைச்சரிடம் புகார் தெரிவிப்பேன்” என தெரிவித்துள்ளார்.
அதற்கு பரமராஜ், “நீ யாரிடம் வேண்டுமானாலும் புகார் செய்து கொள்; டோக்கன் வழங்காவிட்டால் அ.தி.மு.கவினர் பிரச்சினை செய்வார்கள்” என கூறி உள்ளார். இந்த ஆடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்றொரு மருத்துவரிடம் இதனை பகின்ற மருத்துவர் பிரவீன் மற்ற கட்சியினர் டோக்கன் கேட்டு இல்லை என்று சொன்னால் சரி என்று சொல்கின்றார்கள்.ஆனால் அ.தி.மு.கவினர் தான் மிரட்டுகின்றனர் என கவலை தெரிவித்துள்ளார். இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.