“எய்ம்ஸ் மருத்துவமனை கோவைக்கு வேண்டுமென்று பிரதமரிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. கொங்குநாட்டு மக்களின் சார்பாக முதலமைச்சருக்கு நன்றி.” என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பிரதமர் மோடியை சந்தித்து தமிழ்நாட்டிற்கு தேவையான முக்கியமான கோரிக்கைகளை முன் வைத்துள்ளார். அந்தக் கோரிக்கைகளில் கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனையை ஒன்றிய அரசு அமைக்க வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார். இது கொங்கு மண்டல மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ்நாடு அரசு கொங்கு மண்டலத்தை புறக்கணிக்கிறது என்று கூறியவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டுமென்று தொடர்ந்து குரல் கொடுத்தோம். அதற்காக போராட்டத்தை முன்னெடுத்தோம்.
ஒன்றிய அரசு பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு ஆய்வு செய்து தயாராக இருந்தது. ஆனால் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் உட்பட முன்னாள் அமைச்சர்கள் யாரும் இதை கண்டுகொள்ளவில்லை. அதன்பிறகு எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.
கொங்கு மண்டலத்தை சேர்ந்த அமைச்சர்கள் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அதிகமாக இருந்தும் ஒருவர் கூட கொங்கு மண்டலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டுமென்று குரல் கொடுக்கவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொங்கு மண்டலம் கோவைக்கு எய்ம்ஸ் மருத்துவமனையை வேண்டுமென்று கேட்டிருக்கிறார். இந்தக் கோரிக்கை யாரும் எதிர்பார்க்காத ஒன்று.
எய்ம்ஸ் மருத்துவமனை பெருந்துறையில் அமைக்கப்பட்டால் கொங்கு மண்டல மாவட்டங்கள் அனைத்திற்கும் மையமாக இருக்கும். பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு தேவையான வசதிகள் அனைத்தும் இருக்கின்றன. எனவே தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கோவைக்கான எய்ம்ஸ் மருத்துவமனை கோரிக்கையை ஈரோடு பெருந்துறைக்கு பரிசீலிக்க வேண்டுமென்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வலியுறுத்துகிறது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.