பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பது தொடர்பாக நிச்சயம் முடிந்ததை செய்வதாக முதலமைச்சர் உறுதியளித்ததாக பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு மருத்துவக் காரணங்களுக்காக ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இந்நிலையில், பேரறிவாளனின் பரோல் அவகாசம் முடிவடைய உள்ள நிலையில் அதனை நீட்டிக்க வேண்டும் என்று அவரது தாய் அற்புத்தமாள் முதலமைச்சரைச் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்த பின், செய்தியாளர்களிடம் பேசிய அற்புதம்மாள், “பேரறிவாளனுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பரோல் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து 30 நாட்கள் பரோல் அளித்தார் முதலமைச்சர். அதற்கு நன்றி தெரிவித்தேன்.
பேரறிவாளனின் உடல்நிலையை கண்காணிக்க வேண்டிய சூழல் உள்ளது. தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அவருக்கு தேவைப்படுகிறது. எனவே, தொடர்ந்து சிகிச்சை அளிக்க உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும், பரோல் நீட்டிப்பது தொடர்பாகவும் கோரிக்கை வைத்தேன்.
நீங்கள் இருக்கும் மனநிலையில்தான், நானும் இருக்கிறேன் என்றார் முதலமைச்சர். நிச்சயம் முடிந்ததைச் செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்” எனத் தெரிவித்தார்.