கோயம்பேடு காய்கறி சந்தையில் கொரோனா தடுப்பூசி முகாமினை ஆய்வு மேற்கொண்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “ தமிழகத்தில் தற்போது வரையும் 1,06,20,970 தடுப்பூசி வந்தடைந்துள்ளது. 98 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா மூன்றாம் அலை வந்தாலும் அதனை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது. இதுவரை 9,655 பேர் கோயம்பேடு வணிக வளாகத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். ஒரே இடத்தில் 10 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்ட மிகப்பெரிய வணிக வளாகம் கோயம்பேடு சந்தைதான்.
மேலும் இன்றுடம் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 1 கோடி நேருங்க உள்ளது. இன்று மாலைக்குள் 4 லட்சம் தடுப்பூசிகள் சென்னை வர உள்ளது. தடுப்பூசி போடும் பணி திருவிழா போல சிறப்பாக தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. 5000க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் 50,197 படுக்கைகள் காலியாக உள்ளது. ஜூன் மாதத்தின் வரவு 42 லட்சம் தடுப்பூசி ஆனால், தற்போது வரையும் 5.5 லட்சம் தடுப்பூசி வந்துள்ளது.
அ.தி.மு.க ஆட்சியில் முதல் அலையில் தொற்று உச்ச நிலையில் இருந்த போது மதுபான கடையை திறந்த வைத்தார்கள். ஆனால் தற்போது தமிழகத்தில் தொற்று குறைந்த வரும் நிலையில், தான் மது கடையை திறக்க அனுமதி அளித்து இருக்கிறோம். தமிழகத்தில் வருவாய் குறைந்துள்ளது அதை கருத்தில் கொண்டும், தொற்று முடியும் தருவாயில் உள்ளது. எனவே தான் மதுக்கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.