முகக்கவசம், சானிடைசர் போன்றவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “தனியார் மருத்துவமனைகளில் ஏழை, எளிய மக்களிடம் இஷ்டத்திற்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது. மருத்துவமனை நஷ்டத்திலும் இயங்கக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு தான் கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் மருந்துக் கடைகளும் நஷ்டத்திலும் இயங்கக்கூடாது. இந்த நிலையை பயன்படுத்தி கொள்ளை லாபம் ஈட்டும் நோக்கிலும் செயல்படக் கூடாது. இது உயிர்பறிக்கும் நோய். தொற்று சமயத்தில் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
ஏற்கனவே தனியார் ஆய்வகங்கள், சில மருத்துவமனைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து தவறு செய்பவர்கள் மீது புகார் அளிக்கப்படும் பட்சத்தில், அல்லது ஆய்வு பணி நடைபெறும் போது தவறு நடந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்துள்ளார்.
மேலும், தடுப்பூசி வருகையை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “பொதுமக்களிடம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு 3.2 லட்சம் தடுப்பூசி செலுத்தும் நிலை உள்ளது.
தடுப்பூசி வீணாவது குறைந்துவிட்டது. முன்னர் வீணாகும் அளவு 13 சதவீதமாக இருந்தது உண்மைதான். தற்போது 1 சதவீதமாகவே உள்ளது. தடுப்பூசி பற்றாக்குறையின் காரணமாக தடுப்பூசி மருந்தின் அளவை குறைத்து செலுத்தப்படுகிறது என்பது முற்றிலும் வதந்தி." எனத் தெரிவித்துள்ளார்.