திருச்சியை சேர்ந்த மருத்துவர் பிரபு. இவர் தற்பொழுது வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். பணியிடமாறுதலுக்கான கலந்தாய்வில் கடந்த பிப்ரவரி மாதம் கலந்து கொண்டார். சென்னை ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு விருப்பம் தெரிவித்தபோதும் பணியிட மாறுதலில் இவரது பெயர் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் முகநூலில் இவர் தன்னுடைய மனவேதனையை பதிவிட்டு இருந்தார். அதில் பணியிட மாறுதலுக்கான தன்னுடைய கோரிக்கையானது தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகிறது. இதனால் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளேன் எனவும் என்னை கருணைக் கொலை செய்து விடுங்கள் எனவும் மிகுந்த மன வருத்தத்தில் பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் அவரது பதிவினை பல தரப்பினரும் பகிர்ந்த சூழ்நிலையில், ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் பார்வைக்கு செல்ல, மேலும் பலரும் இதை பகிர்ந்த அடுத்த ஒரு மணி நேரத்தில் முதல்வரின் கவனத்திற்கு இது சென்றுள்ளது. உடனடியாக அவர் பதிவிட்ட ஒரு மணி நேரத்திலேயே அவருக்கு மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் இருந்து அழைப்பு வந்திருக்கிறது.
அதுமட்டுமல்லாது உடனடியாக அவருடைய கோரிக்கை நிறைவேற்றப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். முதல்வருடைய உத்தரவையடுத்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரடியாக மருத்துவர் பிரபுவுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இதனை தெரிவித்தார். இதனால் மனம் மகிழ்ந்த மருத்துவர் பிரபு தன்னுடைய கோரிக்கை கடந்த பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருந்த நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உடனடி நடவடிகையால் கஒரு மணி நேரத்திலேயே நிறைவேற்றப்பட்டதாக மனமகிழ்ந்து என்னுடைய முகநூல் பக்கத்தில் நன்றியினை தெரிவித்து இருந்தார்.
இதுதொடர்பாக மருத்துவர் பிரபு அளித்த பேட்டியில், “என் கோரிக்கையை முகநூல் வாயிலாக பதிவிட்டு இருந்தேன். அதில் என்னுடைய மன உளைச்சலை தெரிவித்திருந்தேன். இதனை முதல்வர் கவனத்திற்கு சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வாயிலாக ஒரு மணி நேரத்திலேயே முதல்வரின் உடைய கவனத்திற்கு சென்று, அதன் மீது உரிய நடவடிக்கையினை முதல்வர் அவர்கள் எடுத்திருக்கிறார்கள்.
இதற்கு உறுதுணையாக இருந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களுக்கும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா எழிலன் அவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் என் நன்றி. இது அரசியலுக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளில் அரசு செவிசாய்க்கும் என்பதற்கு இதுவே ஒரு எடுத்துக்காட்டு. இவ்வாறு ஒரு மணி நேரத்திலேயே கோரிக்கையானது நிறைவேற்றப்படுவது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் மட்டுமே சாத்தியம் அவருக்கு என் உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து டிசம்பர் 3 இயக்கத்தைச் சேர்ந்த பேராசிரியர் தீபக் அளித்த பேட்டியில், “மாற்றுத்திறனாளி மருத்துவரான பிரபு தொடர்ந்து என்னுடைய கோரிக்கை நிறைவேற்றப்படாததால் மிகுந்த மன உளைச்சலில் முகநூலில் தன்னுடைய கோரிக்கையை பதிவிட்டார். அதில் கருணை கொலை செய்து விடுங்கள் என்ற ஒரு வாக்கியத்தையும் அவர் மிகுந்த மன உளைச்சலில் பதிவிட்டிருந்தார்.
இந்தநிலையில்தான் அவருடைய அந்த பதிவானது ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் வாயிலாக முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. முதல்வரும் அடுத்த ஒரு மணி நேரத்திலேயே அந்த கோரிக்கையின் மீது நடவடிக்கை எடுத்துள்ளார். கடந்த பல ஆண்டுகளாக அவருடைய கோரிக்கையானது நிராகரிக்கப்பட்ட நிலையில் முகநூலில் அவர் பதிவிட்ட ஒரு மணி நேரத்திலேயே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருடைய கோரிக்கையின் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதற்கு அனைத்து மாற்றுத்திறனாளிகள் சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது மட்டுமல்ல எப்போதுமே மாற்றத்தின் தூதர் மாற்றுத்திறனாளிகளின் தோழர் என்று நாங்கள் முதல்வரை அழைக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்தகைய நடவடிக்கைக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.