நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மக்களை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இதனால் ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பெட்ரோல் விலை 100 கடந்துவிட்டது. தமிழ்நாட்டிலும் பெட்ரோல் விலை 100ஐ நெருங்கிவிட்டது. தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகத்திலேயே இருப்பது சாமானிய மக்களை வேதனையடையச் செய்துள்ளது.
இந்நிலையில், "பெட்ரோல், டீசல் விலை உயர்வு... தடுக்க தவறுகின்றனவா அரசுகள்?" என்ற தலைப்பில் தனியார் தொலைக்காட்சி செய்தி ஊடகத்தில் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பா.ஜ.கவின் செய்தி தொடர்பாளர் அஸ்வத்தாமனின் பேச்சு, “என்ன கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்றாரு” என நினைக்கும் அளவுக்கு இருந்தது.
விவாதத்தின் போது நெறியாளர், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாய் என்பது சாமானிய மக்களால் பொறுத்துக் கொள்ளக்கூடிய விலையா எனக் கேட்கிறார். அதற்கு பதில் அளிக்கும் பா.ஜ.கவின் அஸ்வத்தாமன், "ஒரு லிட்டர் பெட்ரோல் சாமானியர்களுக்கு மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு போதுமானது. நான்கு நாட்களுக்கு இவர்களின் பட்ஜெட்டில் 15 ரூபாய் அதிகமாகும்.
நாம் பெரிய கண்டெய்னர் எடுத்துச் சென்று பெட்ரோல் போட போவதில்லை. கார் அல்லது இருசக்கர வாகனத்தில் தான் பெட்ரோல் போடப் போகிறோம். அதனால் நான்கு நாட்களுக்கு 15 ரூபாய் அதிகரிப்பதும், 100 ரூபாய் ஆவதும் எங்களைப் பாதிக்கவில்லை.
அரபு நாடுகளிலிருந்து பெட்ரோல் வாங்குவதைக் குறைக்க வேண்டும். பெட்ரோலை பயன்படுத்துவது சுற்றுச்சுழலுக்கு நல்லதல்ல. நம் நாட்டு விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும்" என்றார்.
பா.ஜ.கவின் செய்தி தொடர்பாளர் அஸ்வத்தாமனின் இந்த பேச்சை நெட்டிசன்கள் இணையத்தில் வைரலாக்கி, அவரை கிண்டலடித்து வருகிறார்கள்.