தமிழ்நாட்டில் ஜூன் 14ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திங்கட்கிழமை முதல் பத்திரப்பதிவு அலுவலகங்கள் குறைந்த எண்ணிக்கையில் செயல்படத் துவங்கியுள்ளது.
இந்நிலையில், மதுரை திருமலை நாயக்கர் மஹால் அருகேயுள்ள பத்திரப் பதிவு அலுவலகத்தில் இன்று வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பத்திரப்பதிவு முறை நடைபெறுகிறதா என்பது குறித்தும் முறைகேடுகள் குறித்தும் அமைச்சர் ஆய்வு செய்து, பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பி.மூர்த்தி, “பத்திரப் பதிவில் முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா கட்டுப்பாடுகளுடன் பத்திரப்பதிவு நடைபெறுகிறது.
பத்திரப் பதிவுத்துறையில் சின்ன தவறுகள் நடந்தாலும் உடனே சரி செய்யப்படும். கடந்த காலம்போல் அல்லாமல், பத்திரப் பதிவு எளிமையான முறையில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இடைத்தரகர்கள் இல்லாமல் உரிய கட்டணம் பெற்று பத்திரப்பதிவு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், அதிக கட்டணம் வசூலிப்பது குறித்தும், பத்திரப்பதிவு அலுவலகங்களில் முறைகேடு நடப்பதாகப் புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில் தனியாகப் புகார் மையம் அமைக்கப்படும்” என்றார்.
இதனைத் தொடர்ந்து, உசிலம்பட்டி, திருமங்கலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 1,493 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ. 1 கோடியே 4 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பீட்டில் கடன் உதவிகளையும், நோய் எதிர்ப்பு சக்தி அடங்கிய மருந்து தொகுப்பையும் அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார்.