தமிழ்நாடு

தமிழர்களின் உணர்வுகளை மதிக்காத ஒன்றிய அரசு; நியூட்ரினோ திட்டத்தை கைவிடுக - வைகோ வலியுறுத்தல்!

நியூட்ரினோ திட்டம் செயல்படுத்தப்பட்டால் மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் அதைச் சுற்றியுள்ள அணைகளின் பாதுகhப்பு கேள்விக் குறி ஆகும் என வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழர்களின் உணர்வுகளை மதிக்காத ஒன்றிய அரசு; நியூட்ரினோ திட்டத்தை கைவிடுக - வைகோ வலியுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

“சுற்றுச்சூழலைக் கெடுக்கும் நியூட்ரினோ திட்டம் கூடாது” எனக் குறிப்பிட்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளார்.

அதன் விவரம் பின்வருமாறு:-

“இந்த உலகில் பழம்பெருமை மிக்க இடங்களுள் ஒன்றாக, ஐ.நா.மன்றம் அறிவித்து இருக்கின்ற, மேற்குத் தொடர்ச்சி மலை, தமிழ்நாட்டின் நீர் ஆதாரமாகத் திகழ்கின்றது. ஆனால், கடந்த ஒரு நூற்றாண்டாக அங்கே கடுமையான ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டு இருக்கின்றன. யானைகளின் கhட்டு வழித் தடத்தை மறித்துக் கட்டப்பட்ட நூற்றுக்கணக்கhன சுற்றுலா விடுதிகளை, முழுமையாக இடித்துத் தகர்க்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்து இருக்கின்றது.

இந்த நிலையில், தேனி மாவட்டம் பொட்டிப்புரம் கிராமத்தில் உள்ள அம்பரப்பர் மலையில், இலட்சக்கணக்கான டன் கருங்கற் பாறையை வெட்டி எடுத்து குகை குடைந்து, அங்கே நியூட்ரினோ துகள்கள் குறித்து ஆராய்ச்சி செய்வதற்கhக ஆராய்ச்சி மையம் அமைக்கும் முயற்சியில், கடந்த 2010ஆம் ஆண்டில் இருந்து ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருகின்றது. இதனால் முல்லைப் பெரியாறு, இடுக்கி ஆகிய அணைகளில் விரிசல் ஏற்படும்.

சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் இந்தத் திட்டத்தை, உள்ளூர் மக்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இத்திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் தடை இன்மைச் சான்றை எதிர்த்து, பூவுலகின் நண்பர்கள் சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் தொடரப்பட்ட வழக்கில், 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வழங்கப்பட்ட இறுதி தீர்ப்பில், திட்டத்திற்கு ஒன்றிய அரசு வழங்கிய சுற்றுச்சூழல் சான்று செல்லும் என்றும் ஆனால், தேசிய காட்டு உயிர் வாரியத்தின் தடை இன்மைச் சான்று பெறாமல் (NBWL) திட்டத்தைச் செயல்படுத்தக் கூடாது எனக் கூறப்பட்டு இருந்தது.

திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் சான்று செல்லும் என்ற பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடுத்த மேல்முறையீடு, விசாரணையில் இருக்கின்றது.

தமிழர்களின் உணர்வுகளை மதிக்காத ஒன்றிய அரசு; நியூட்ரினோ திட்டத்தை கைவிடுக - வைகோ வலியுறுத்தல்!

இந்த நிலையில், கடந்த மே 20ஆம் தேதி, இத்திட்டத்திற்கான காட்டு உயிர்கள் பாதுகாப்பு வாரியத்தின் தடை இன்மைச் சான்று கோரி, தமிழ்நாடு அரசின் வனத்துறையிடம் TATA INSTITUTE OF FUNDAMENTAL RESEARCH விண்ணப்பித்துள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் அதைச் சுற்றியுள்ள அணைகளின் பாதுகhப்பு கேள்விக் குறி ஆகும். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையின்படி, இத்திட்டத்தை, Category A யின் கீழ்தான் பரிசீலிக்க முடியும் என்று அப்போதைய மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (SEIAA) கூறிய போதிலும், திட்டத்தை வெறும் கட்டுமானம் கட்டும் பிரிவில் அதாவது Category B என மாற்றி, தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் என்று அறிவித்து, ஒன்றிய அரசே நேரடியாக சுற்றுச்சூழல் சான்று வழங்கி இருந்தது.

தமிழ்நாடு கேரள எல்லையில் உள்ள மதிகெட்டான் சோலை தேசிய பூங்கhவின் தமிழ்நாடு பகுதியில் உள்ள கhட்டுப் பகுதியை மட்டும் தவிர்த்து விட்டு, பிற பகுதிகள் அனைத்தையும் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகவும் ஒன்றிய அரசு அறிவித்தது. இப்படி தமிழ்நாடு அரசின் முடிவையும் மக்களின் எதிர்ப்பையும் மீறி இத்திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்த முனைகின்றது.

தமிழகத்தின் நீர் ஆதாரமாகத் திகழ்கின்ற மேற்குத் தொடர்ச்சி மலைக்குக் கேடு விளைவிக்கும் இந்தத் திட்டத்தை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்தேன். நியூட்ரினோ வழக்கு எண். WP(MD) 733/2015 வழக்கு தாக்கல் செய்த நாள் 20.01.2015, மேற்படி வழக்கு இறுதியாக மாண்புமிகு நீதிபதிகள் தமிழ்வாணன், ரவி ஆகியோர் முன்பு 26.03.2015அன்று விசாரணைக்கு வந்தது. முடிவில் அரசு தரப்பில் தடையின்மைச் சான்று (Clearance Certificate) வாங்கவில்லை என பதில் மனு தாக்கல் செய்து இருந்தனர். ஆகவே, நீதிமன்றம் தடை ஆணை வழங்கி உள்ளது

2018 ஆம் ஆண்டு, மதுரை பழங்காநத்தத்தில் இருந்து கம்பம் வரை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், என் தலைமையில் 13 நாள்கள் நடைபயணம் மேற்கொண்டோம். இந்த நடைபயணத்தை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் துவக்கி வைத்தார் என்பதையும், 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் நியூட்ரினோ திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று அறிக்கை வாயிலாக அவர் வலியுறுத்தி இருந்தார் என்பதையும் நினைகூர விரும்புகின்றேன்.

எனவே, காட்டு உயிர்களுக்குக் கேடு இல்லை என, மாநில அரசிடம் சான்று கோரி இருக்கின்ற விண்ணப்பத்தை, தமிழ்நாடு அரசு ஏற்கக் கூடாது; ஏற்கெனவே வழங்கப்பட்ட வனத்துறை சான்றையும் திரும்பப் பெற வேண்டும்; உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கின் விசாரணையில் தமிழ்நாடு அரசு தனது நிலைப்பாட்டை தெளிவாக எடுத்து உரைத்து சுற்றுச்சூழல் சான்றுக்குத் தடை விதிக்கும் தீர்ப்பைப் பெறவும், தமிழ் நாடு அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

தமிழ்நாட்டின் உரிமைகளையும், தமிழ் மக்களின் உணர்வுகளையும் மதிக்காமல், ஒன்றிய அரசு இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தொடர்ச்சியாக முயற்சி செய்து வருகின்றது. எனவே, இந்தத் திட்டத்திற்காகத் தமிழக அரசு வழங்கிய நிலத்தையும் திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.”

எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories