தமிழ்நாட்டில் கடந்த 13 நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம், சோளிங்கர், வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் 120 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், "தமிழ்நாடு முதலமைச்சரின் புயல் வேக நடவடிக்கை காரணமாக, 30,002 படுக்கைகள் காலியாக உள்ளன. இதன்மூலம், பெரிய அளவிலான படுக்கை தட்டுப்பாடு குறைந்துள்ளது. அதேபோல் கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கி அரசு மருத்துவமனைகளில் போதிய கட்டுமானப் பணிகள் இருப்பதை உறுதி செய்து வருகிறோம்.
தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றபோது தினசரி ஆக்சிஜன் இருப்பு 230 டன்னாக இருந்தது. இது தற்போது 660 டன்னாக அதிகரித்துள்ளது. தற்போதைய தேவை அளவு 500 டன்னாக உள்ளது. செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி நிறுவனம் தொடர்பாக முதல்வர் பேசி வருகிறார். இதில், நல்ல தீர்வு கிடைக்கும்.
கரும்பூஞ்சை நோயைக் கட்டுப்படுத்த தமிழ்நாட்டுக்கு இதுவரை 1,790 மருந்துக்குப்பிகள் மட்டுமே ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டிற்கு 30 ஆயிரம் மருந்து குப்பிகள் தேவை என்று ஒன்றி அரசு கடிதம் எழுதப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் தடுப்பூசி மையத்தில் உற்பத்தியைத்துவங்க ஒன்றிய அரசிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்" என்றார்.