பழங்குடியின பெண்ணுக்கு தையல் மெஷின் வழங்குவதோடு உயர்கல்வி படிக்கவும் உதவி செய்வதாக அமைச்சர் எஸ்.எஸ்.சிவங்கர் உறுதியளித்துள்ளார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டின் பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் எஸ்.எஸ். சிவசங்கர். இவர் சமீபத்தில் அரியலூர் மாவட்டம் செந்துறையில் பொதுமக்களைச் சந்தித்து மனுக்களைப் பெற்றார்.
அவரிடம் பழங்குடியின மாணவி சந்திரா என்பவர் உதவி வேண்டி அமைச்சரிடம் மனு அளித்தார். அமைச்சரிடம் அப்பெண், தான் 12ஆம் வகுப்பு வரை படித்திருப்பதாகவும், மேற்படிப்பு படிக்க வசதி இல்லாத காரணத்தால் தனது படிப்பை நிறுத்திவிட்டதாகவும், தனது வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் தனக்கு ஒரு தையல் மிஷின் வழங்கி உதவுமாறும் கோரிக்கை விடுத்தார்.
அப்பெண்ணின் கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், “தையல் மெஷின் வாங்கித்தருகிறேன்… ஆனால், அதையே நம்பினால், காலம் முழுவதும் தையல் மெஷினே வாழ்க்கையாகிடும். அதனால், மேற்படிப்புக்கு உதவியும் செய்கிறேன். நன்றாக படித்து நாலு பேருக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும்” என்று வாழ்த்தினார்.
மேலும், அந்தப் பெண்ணுக்கு தேவையான உதவிகளை செய்ய தனது உதவியாளரிடம் அறிவுறுத்தினார். தனக்கு தையல் இயந்திரம் வழங்குவதாக உறுதியளித்ததோடு, உயர்கல்விக்கும் உதவுவதாக அமைச்சர் உத்தரவாதம் அளித்ததால் அந்தப் பெண் மிகவும் மகிழ்ந்துள்ளார்.
இதுகுறித்து மாணவி சந்திரா தெரிவிக்கையில், “எங்கள் இனத்தில் பள்ளிப்படிப்பை கூட பலர் மேற்கொள்ளாத சூழலில் நான் 12 வது வரை படித்துவிட்டு மேலே படிப்பதற்கு வசதி இல்லாமல் இருந்தேன். எனது வாழ்வாதாரத்தை காப்பதற்காக அமைச்சரிடம் தையல் மிஷின் வேண்டும் என மனு கொடுத்தேன். அமைச்சர் அவர்கள் என்னை கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்கிறேன் என்று கூறியுள்ளார். நான் கல்லூரிக்கு சென்று படிக்கப்போவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.” என நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.