கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மகாலட்சுமிநகரை சேர்ந்த ஒவியர் சிவா என்பவரது மகன் வம்சிக்.இவர் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவன் வம்சிக் ஏழை எளிய குழந்தைகளின் நலன் மற்றும் கல்வி உதவிக்காக தான் வரையும் ஒவியப்படங்களை இணையதளத்தில் ஏலம் விட்டு, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவர்களுக்கு உதவிடும் நோக்கில் தனது ஒவியங்கள் வழியாக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு பணம் வழங்க திட்டமிட்டார். அதற்காக, “முதல்வரின் முதல் கையெழுத்து ஒவியம்” என்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஒவியத்தை தத்ருபமாக வரைந்துள்ளார்.
தமிழக முதல்வரின் ஒவியப்படத்தை தன்னுடைய இணையத்தளத்தின் வாயிலாக ஏலத்தில் விற்பனை செய்யும் மாணவர் வம்சிக் அந்த பணத்தை முதலமமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க உள்ளார். முதல்வரின் ஒவியப்படம் இணையதளத்தில் 33 ஆயிரம் ரூபாய்க்கு ஆரம்ப விலையாக நிர்ணயம் செய்துள்ளார்.
இதில் அதிகப்படியாக ஏலம் கேட்கப்படும் பணத்தை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க உள்ளார். தொடர்ந்து இதுபோன்ற ஒவியங்களை வரைந்து அதில் கிடைக்கும் பணம் முழுவதையும் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க மாணவர் திட்டமிட்டுள்ளார்.
எற்கனவே குழந்தைகளின் நலன் மற்றும் கல்வி உதவிக்காக ஒவியப்படங்களை வரைந்து ஏலத்தில் விட்டு அதன் மூலம் கிடைக்கும் பணத்தை உதவி செய்து வரும் மாணவரின் செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.