சென்னை கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பெரியார் நகரில் உள்ள அரசு மருத்துவமனை, நவீன மருத்துவமனையாக மாற்றப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகளை அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு ஆகியோர் ஆய்வு செய்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி சென்னை கொளத்தூர் தொகுதியில் உள்ள பெரியார் நகரில் 100 படுக்கைகள் உடன் செயல்பட்டு வந்த மருத்துவமனையை 300 படுக்கைகளுடன் நவீன வசதிகள் கொண்ட மருத்துவமனையாக மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த கட்டுமானப் பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் இன்று நேரில் ஆய்வு செய்தனர். அப்போது திட்டமிட்ட நாட்களில் பணிகளை முடிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் அமைச்சர் எ.வ.வேலு வலியுறுத்தினார்.
பின்னர் செய்திளார்களைச் சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, "பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் 12 கோடி ரூபாய் மதிப்பில் முதல்வரின் உத்தரவுப்படி நடைபெற்று வரும் இந்த மேம்பாட்டுப் பணியில் ரூ.3 கோடி வரை கட்டுமானப் பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சி.டி. ஸ்கேன் வசதிக்காக ரூ. 2 கோடியும், இதர தொகை மீதமுள்ள பணிகளுக்குப் பயன்படுத்தப்படும். பொதுப்பணித் துறையின் முதல் பணியே முதலமைச்சர் தொகுதியிலிருந்து தொடங்குவது மகிழ்ச்சியளிக்கிறது." என்றார்.