திமுவின் மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவும், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவும் மத்திய தொழில் வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் மத்திய வேதியல்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா ஆகியோருடன் நேரில் சந்தித்து செங்கல்பட்டு HLL Biotech Ltd ( HBL) - ஒருங்கிணைந்த தடுப்பூசி மைய நிறுவனத்தைத் தமிழ்நாடு அரசே குத்தகை அடிப்படையில் ஏற்று நடத்தி, அதன் வாயிலாக தடுப்பூசியினை தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அதன் பிறகு கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர்.பாலுவும், தங்கம் தென்னரசும் பேசியதாவது:
முதலில் பேசிய டி.ஆர்.பாலு எம்.பி, “செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்தை தமிழக அரசே ஏற்று நடத்துவது தொடர்பாக தமிழக முதல்வர் உத்தரவின் பேரில், அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து ஆலோசனை நடத்தினோம்.
தற்போது கொரோனா பரவல் தீவிரமாக உள்ளதால் தடுப்பூசி அதிகளவில் தயாரிக்க வேண்டும் என்பதே முதல்வர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கை. அதையும் மத்திய அமைச்சரிடம் விரிவாக எடுத்துரைத்தோம். மத்திய அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியும், சில நிறுவனங்களை விண்ணப்பித்துள்ளன. அவர்களும் பல காரணங்களால் உற்பத்தி மேற்கொள்ளத் தயங்குவதாகத் தெரிகிறது.
எனவேதான் தமிழக அரசே தடுப்பூசி தயாரிக்க ஏதுவாக குத்தகைக்கு விட வேண்டும் என்றும் கேட்டிருக்கிறோம். எப்படியானாலும் விரைவில் தடுப்பூசி தயாரிக்க வேண்டும் என்பதே நோக்கம். இன்னும் ஒரு வாரத்தில் இது தொடர்பாக பதிலளிப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளதாக கூறினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “செங்கல்பட்டு தடுப்பூசி ஆலை தொடர்பாக எங்கள் தரப்பு திட்டத்தைக் கொடுத்துள்ளோம். அதை ஆராய்ந்து முடிவெடுப்பதாக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டில் தடுப்பூசி தயாரிப்பு தொடங்கப்பட்டால் முதல் 6 மாதத்தில் 2 கோடி தடுப்பூசியும், அடுத்த ஓராண்டில் 8 கோடி தடுப்பூசியும் தயாரிக்க முடியும் என்று கூறினார்.
தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசி வழங்குவது தொடர்பாகவும் இன்றும் வலியுறுத்தினோம், உரிய அளவு வழங்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். தமிழக அரசுக்கு தேவையான அளவு தடுப்பூசியை மத்திய அரசு வழங்குகிறது என்றும் என்று டி.ஆர்.பாலு அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் தெரிவித்தனர்.