தமிழகத்தில் கொரோனா பாதித்து சினிமா பிரபலங்கள் சிலர் உயிரிழந்துள்ளனர். மேலும் நடிகர்கள் பலர் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில், நடிகர் காளி வெங்கட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டிருந்தார். இதில், கொரோனா பாதித்த அனுபவங்கள் குறித்து பகிர்ந்திருந்தார்.
அந்த வீடியோவில், “கொரோனா வராமல் பார்த்துக்குறதுதான் முக்கியம். பதற்றமாக கூடாதுனு சொல்றாங்க. அதனால வராம பாதுகாத்துக்குங்க, பத்திரமா இருங்க, வந்துடுச்சுன்னாலும் அலட்சியமா இருக்காதீங்க. தைரியமா இருங்க. முக்கியமா அறிகுறி தென்பட்டாலும் உடனே மருத்துவரை அணுகி , அவர் சொல்றத கேளுங்க" எனப் பேசியிருந்தார்.
மேலும், படுக்கை கிடைக்கவில்லை என்றும், கடந்த மாதம் தொற்றால் பாதித்தேன் எனவும், மருத்துவ நண்பர் உதவியுடன் 21 நாள் சிகிச்சை பெற்றேன் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, நடிகர் காளி வெங்கட்டின் வீடியோவை சில இணைய செய்திகள் தவறாக புரிந்து கொண்டு,'கொரோனா பாதித்து மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் தவித்த நடிகர்' என செய்தி வெளியிட்டிருந்தனர்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நடிகர் காளி வெங்கட், இன்று ஒரு ட்வீட் பதிவிட்டிருந்தார். அதில் "1.8M followers இருக்காங்க கொஞ்சம் பொறுப்போட செய்தி போடுங்க, முதல்ல வீடியோவ பாருங்க,தொற்று எனக்கு வந்தது மார்ச் மாதம். அந்த அனுபவத்த இப்போ வீடியோவா போட்ருக்கேன். அதுல என்ன #பகீர் இருந்தது உங்களுக்கு. எனக்கு தெரிஞ்ச மருத்துவர் இருக்கிற மருத்துவமனைக்கு போனேன் அங்க படுக்கை இல்ல அவ்ளோதான்." எனத் தெரிவித்துள்ளார்.